ஈரான் முன்னாள் அதிபர் மரணம்
ஈரான் நாட்டின் முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமி ரஃப்சஞ்சானி (82), மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
ஈரானில் 1989 முதல் 1997-ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ரஃப்சஞ்சானி. ஈரான் ராணுவத்தில் பணிபுரிந்தவரான ரஃப்சஞ்சானி, ஈரான் - இராக் போரில் முக்கியப் பங்காற்றியவர் ஆவார்.
பின்னர், அரசியலில் நுழைந்த அவர், ஈரான் நாடாளுமன்றத் தலைவராக 1980-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் 9 ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்த ரஃப்சஞ்சானி, அதன் பிறகு அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். இதில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமது ஆட்சிக்காலத்தில், ஈரானில் பல்வேறு பொருளாதார - சமூக சீர்திருத்தங்களை அவர் கொண்டு வந்தார்.
தாராளச் சந்தைக் கொள்கையை செயல்படுத்தியது; அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கியது உள்ளிட்டவை அவரது ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகும்.
இதனிடையே, சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரஃப்சஞ்சானி, தெஹ்ரானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார்.
Post a Comment