பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு, பொலிஸாரினால் நேர்ந்த கதி
தனது அடையாளத்தை உறுதிப்படுத்தத் தவறிய கொழும்பு பிரதேசத்தின் பொலிஸ் நிலையம் ஒன்றின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஒருவரை சுமார் 12 மணி நேரம் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய சிறைக் கூண்டில் அடைத்து வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அறிய முடிவதாவது, கடந்த திங்களன்று இரவு பம்பலபிட்டி பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பொலிஸ்குழுவொன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது.
சார்ஜன்ட் ஒருவரின் தலைமையில் ரோந்து சென்ற இந்த குழு பிரபல ஹோட்டல் ஒன்றின் அருகே நபர் ஒருவர் நிற்பதை அவதானித்துள்ளனர்.
அவரில் சந்தேகமடைந்துள்ள பொலிஸார் அவரிடம் விசாரணை செய்துள்ளனர். இதன்போது அவர் தான் நிக்கவரட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார்.
எனினும் அதனை உறுதிப்படுத்தவோ அவரது பதவி நிலை அல்லது தொழில் குறித்தோ எதனையும் வெளிப்படுத்தவில்லை.
இந்நிலையில் அடையாளத்தை உறுதிப்படுத்த அவர் தவறியதாகக் கூறி பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.
அதன் பின்னர் மேலும் இருவரையும் அவர்கள் அந்த ரோந்தின் போது கைது செய்துள்ளதுடன், அதிகாலை 4.00 மணியளவில் அவர்களை பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையம் கொண்டு சென்று பொலிஸ் கூண்டில் அடைத்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் செவ்வாயன்று கொழும்பு பிராந்திய போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த பொலிஸ் பரிசோதகர் மட்டும் பங்கேற்கவில்லை.
இதனையடுத்து அவர் கடமைக்கும் சமுகமளிக்காமையை அடிப்படையாகக்கொன்டு அவரை பொலிஸார் தேட ஆரம்பித்துள்ளனர். அவரது தொலைபேசி உள்ளிட்டவை அவரது உத்தியோகபூர்வ அறையிலேயே இருந்தநிலையில் பொலிஸ் போக்குவரத்து பொறுப்பதிகாரியை தேடி விசாரணை இடம்பெற்றுள்ளன.
இதன்போதே பம்பலபிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸ் கூண்டில் உள்ள குறித்த பொலிஸ் பரிசோதகரை அடையாளம் கண்டு உடனடியாக விடயத்தை தெரியப்படுத்தி கூண்டிலிருந்து அவரை விடுவித்துள்ளார்.
இதனையடுத்து அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் தான் ஒரு பொலிஸ் போக்குவரத்து பொறுப்பதிகாரி என்றோ அல்லது பொலிஸ் பரிசோதகர் என்றோ கைதாகும்போது ஏன் அவர் கூறவில்லை என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பாலித்த பனாமல் தெனிய ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
Post a Comment