வன்முறையான சக்திகளின் பலம் குறித்து, துச்சமாக கருத வேண்டாம் - அரசாங்கத்திற்கு எச்சரிக்கை
அரசாங்கத்தை இந்த வருடத்திற்குள் கவிழ்க்க தயாராகியுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுத்துள்ள அச்சுறுத்தலை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக் கூடாது என நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ண அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமகால அரசியல் நிலவரம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், நாட்டில் இனவாதத்தை தூண்டியும் சிங்கள பெரும்பான்மை மக்கள் தன்னுடன் இருப்பதாக காட்டியும் அதனை தாக்குதல் ஆயுதமாக பயன்படுத்தியும் நாட்டில் குழப்பமான சூழலை உருவாக்கியும் அதனுடாக முன்னோக்கி செல்வதே மகிந்த ராஜபக்சவின் திட்டம்.
இந்த ஆண்டில் அரசாங்கத்தை கவிழ்க்க போவதாக மகிந்த ராஜபக்ச விடுத்துள்ள சவாலுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதிலளிக்கையில் தான் வெளிநாட்டிற்கு சென்ற பின்னர் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளுமாறு எனக் கூறினார்.
இதற்கு பதிலளித்துள்ள மகிந்த பிரதமர் இலங்கையில் இருக்கும் போதே அதிகாரத்தை கைப்பற்றுவேன் என குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மக்களை தூண்டும் நோக்கத்துடன் கலாநிதி குணதாச அமரசேகர, கலாநிதி நளின் டி சில்வா மற்றும் பிக்குகள் தலைமையில் ஹம்பாந்தோட்டையில் நிலம் கொள்ளையிடப்படுவதாக கொழும்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டம் ஒன்றில் தெரிவித்திருந்தனர்.
காணிகளையும் துறைமுகத்தையும் குத்தகைக்கு வழங்கப் போவதாக மகிந்த ராஜபக்சவும் அவரது ஆதரவாளர்களும் குற்றம் சுமத்துகின்றனர்.
அவர்களின் ஆட்சிக் காலத்திலும் இப்படி குத்தகைக்கு வழங்கியுள்ளனர். மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் மிகவும் பயங்கரமான நிலைமையின் கீழ் குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டமை நாட்டுக்கு மிகவும் கெடுதியான நிலைமை ஏற்படக் காரணமாகியது.
இன மற்றும் மதவாதத்தை தூண்டி கொடூரமான முறையில் மோதிக் கொள்ளும் நிலைமைக்கு நாட்டை கொண்டு செல்லும் நிலைமைகளை மகிந்த மற்றும் அவரது தரப்பினர் போதித்து வருகின்றனர். இந்த நிலைமையை அடக்க அரசாங்கம் வழங்கும் பதில் போதுமானதாக இல்லை.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை கைப்பற்றி ஆட்சியமைக்க போவதாக மகிந்த ராஜபக்ச கூறினாலும் அவர் அப்படி செய்ய போவதில்லை. நாடாளுமன்றத்திற்கு வெளியில் இதற்காக அவர் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு வருகிறார்.
இராணுவத்தினரைத் தூண்டி அதில் பயன்பெறவும் முன்னாள் ஜனாதிபதி முயற்சித்து வருகிறார். அத்துடன் பல அதிகாரிகளை தயார்படுத்தியும் வருகிறார்.
எனினும் இந்த நிலைமையை எதிர்கொள்ள அரசாங்கம் போதுமான வேலைத் திட்டங்களை ஆரம்பிக்கவில்லை. மகிந்த ராஜபக்ச மக்களை தூண்டுவதில் மிகப் பெரிய கெட்டிக்காரன் என்பதை அரசாங்கத்திற்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
பொருத்தமான தருணத்தில் மக்களை தன் பக்கம் எப்படி திருப்ப வேண்டும் என்பதை மகிந்த ராஜபக்ச நன்கு அறிவார்.
இதன் காரணமாக அவர் மக்கள் மத்தியில் கட்டியெழுப்பி வரும் வன்முறையான சக்திகளின் பலம் குறித்து துச்சமாக கருத வேண்டாம் என அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம். இது குறித்து அரசாங்கம் போதுமான கவனத்தை செலுத்துவது முக்கியமானது எனவும் விக்ரமபாகு கருணாரட்ண தெரிவித்தார்.
Post a Comment