காணாமல் போயுள்ள, மீனவர்களின் நிலையென்ன? - ஹக்கீம் விளக்குகிறார்
கடந்த டிசம்பர் 24ம் திகதி இரண்டு இயந்திரப் படகுகளில் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று காணாமல் போயுள்ள கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் பற்றி பலவாறான தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. படகுகள் இரண்டும் அவற்றில் பயணித்த 6 மீனவர்களும் மாலை தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர் என்ற ஆதாரபூர்வமற்றதும், ஊர்ஜிதமற்றதுமான செய்தியொன்றும் பரப்பப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்புச் செயலாளர் கருணா சேன ஹெட்டியாராய்ச்சியுடனும் கடற்படை தளபதி ரவீந்திர சீ விஜேகுணரத்தினவுடனும் இது நடந்த தினத்திலிருந்து தொடர்ச்சியாக தொரடர்பிலிருந்து வரும்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று காலையும் அவர்களைத் தொடர்பு கொண்டு கதைத்தார்.
அத்துடன், மலைத்தீவு குடியரசில் உள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டபிள்யு. ஜி.என்.எச். டயஸ் மற்றும் இங்குள்ள மலைதீவு உயர்ஸ்தானிகர் திருமதி. ஸாஹியா ஸரீப் ஆகியோருடனும் அமைச்சர் ஹக்கீம் கதைத்துள்ளார்.
அவர்கள் தெரிவித்துள்ள தகவல்களின்படி, மாலைதீவு கடற்படையினரால் ஒரு படகும் அதில் இருந்த இரு மீனவர்களும் மட்டுமே மீட்கப்பட்டு தற்போது மாலைத்தீவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர். மற்றைய படகும் அதில் பயணித்த நான்கு மீனவர்களும் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயினும் மாலை தீவு, இலங்கை ஆகியவற்றின் கடற்படையினரும், விமானப்படையினரும் தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ரவூப் ஹக்கீம் அவர்களின் வேண்டுகோளை ஏற்று இலங்கை, மாலைத்தீவு, தேடுதல் ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக இந்திய கடற்படையினரையும், விமானப்படையினரையும் அவர்களின் கடற்பரப்பிலும் தேடுதல்களை நடாத்த பாதுகாப்பு செயலாளரும் கடற்படை தளபதியும் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள பணிக்கப்பட்டுள்ளனர்.
கடற்படை தளபதி அமைச்சர் ஹக்கீமுக்கு வழங்கியுள்ள தகவலின்படி இம்மீனவர்கள் பொருத்தமான தகவல் தொடர்பு சாதனங்கள் இன்றி ஆழ்கடலுக்கு சென்றதனாலேயே பிரச்சினை உருவாகியுள்ளது. இலங்கை, மாலைத்தீவு கடற்பரப்புகளிலும் அதற்கு அப்பாலும் பயணித்துக்கொண்டிருக்கின்ற கப்பல்கள், வான் எல்லையில் பறந்துகொண்டிருக்கும் விமானங்கள் என்பனவற்றுக்கு இது சம்பந்தமான SOS கட்டளையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறை பிரதியமைச்சரும் கல்முனைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸை உடனடியாக மாலைத்தீவுக்கு புறப்பட்டுச் செல்லுமாறு பணித்துள்ளதுடன் ரவூப் ஹக்கீம் அது சம்பந்தமாக மாலைத்தீவு உயர்ஸ்தானிகர் மூலமாகவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மீனவர்களின் படகை இலங்கைக்கு எடுத்து வருவதற்காக சிலாபத்தைச் சேர்ந்த மாலைத்தீவு - இலங்கை கடற்பாதையில் அனுபவம் மிக்க மாலுமி ஒருவரும் அமைச்சர் ஹரீசுடன் பயணிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் தேடிக் கண்டு பிடித்து தருமாறு தொடர்ச்சியாகவே காணாமற் போயுள்ள மீனவர்களின் குடும்பத்தினர் நேரடியாகவும் அமைச்சர் ஹரீஸ் ஊடாகவும் ரவூப் ஹக்கீமிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். மாலைத்தீவு உயர்ஸ்தானிகருடன் தொடர்பு கொண்ட போது ஆழ்கடலில் படகு கண்டுபிடிக்கப்பட்டால் அதனை கரைக்கு கொண்டு வருவது இலகுவானதாக இருக்காது என்றும் முடிந்தவரை மீனவர்களை மீட்டு தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த மீனவர்கள் காணாமல் போய் ஏறத்தாழ 2 வாரங்களை அண்டிய நிலையில், முழுமையான தேடுதல் முயற்சியில் பல்வேறு தரப்பினரும் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதனால் இவர்களை பாதுகாப்பாக மீட்பது இயலுமாகுமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்தார்.
Kanamel poneverhel kulmunai prethesethai sarntheverhal alle oluvil prethesem
ReplyDelete