மட்டக்களப்பில் இரவோடு இரவாக மாயமான வீதி, வெளிநாட்டவரின் செயலால் பரபரப்பு
வாகரை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டவான் பிரதேச மக்களின் பிரதான போக்குவரத்துப்பாதையை வெளிநாட்டவர் ஒருவர் இரவோடு இரவாக மாயம் செய்த சம்பவத்தை கண்டித்தும் தமது பிரதேச காணியை வெளிநாட்டவருக்கு வழங்கியுள்ளதை கண்டித்தும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாகரை வட்டவானில் உள்ள குறித்த வெளிநாட்டவரின் விடுதிக்கு முன்பாக ஒன்றுதிரண்ட பொதுமக்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பகுதியில் பிரதான வீதியை ஊடறுத்துச்செல்லும் காணிக்கு அருகில் உள்ள வாகரை பிரதேச சபைக்கான வீதியை குறித்த வெளிநாட்டவர் சேதப்படுத்தி அதனை வேலியிடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வீதியை வட்டவான், இறால்ஓடை, நாசிவன்தீவு, காயன்கேணி ஆகிய பகுதிகளைச்சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்திவருகின்றனர்.
குறித்த வெளிநாட்டவரினால் சட்ட விரோதமான முறையில் பல்வேறு நடவடிக்ககைள் முன்னெடுக்கப்பட்டுவரும் போதும் அது தொடர்பில் யாரும் கவனத்தில் கொள்ளவில்லையெனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், வாழைச்சேனைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வட்டவான் கிராமசேவகர், கரையோரம் பேணல் திணைக்கள உத்தியோகத்தார் ஆகியோர் முன்னிலையில் குறித்த வீதி அகற்றுவதற்கு உரிய அதிகாரத்தை அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், பிரதேச சபை மற்றும் கரையோரம் பேணல் திணைக்களத்தின் அனுமதி பெறப்பட்டதா என அலைபேசி ஊடாக குறித்த அதிகாரிகளிடம் கேட்டபோது அவ்வாறான எந்தவொரு அனுமதியும் தங்களால் வழங்கப்படவில்லை என தெரிவித்திருந்தனர்.
இதேவேளை குறித்த சுற்றுலா விடுதிக்கான ஜேர்மன் வெளிநாட்டவரை பொதுமக்கள் முன்னிலையில் அழைத்து கேட்டபோது அரச அதிகாரிகளின் அனுமதிகள் அனைத்தும் தன்னிடமுள்ளதாக சரளமாக சிங்கள மொழியில் உரையாடினார். குறித்த வீதியை இரவோடு இரவாக பெக்கோ இயந்திம் கொண்டு வீதி இருந்த தடயங்கள் இல்லாமல் அழித்தது மட்டுமின்றி வீதியில் இடப்பட்டுள்ள கிறவல் மண் அனைத்தையும் தனது காணிக்குள் பெரிய ஆளமான குளிகள் வெட்டி அதனுள் நிரப்பட்டுள்ளது.
அத்துடன் சுமார் பல நூறு மீற்றர் தூரம்வரை வீதியை பெக்கோ இயந்திரம் கொண்டு துண்டம் துண்டமாக வெட்டி பொதுமக்களின் போக்குவரத்தை முற்றாக தடை செய்யும் அத்துமீறிய செயற்பாடு நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை ஆர்ப்பாட்டத்தின் முடிவில் குறித்த வீதியை தற்போது பாவிக்கலாம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் முன்னிலையிலும் அறிவிக்கப்பட்டதுடன் உரிய கடற்கரை வீதி தொடர்பான பிரச்சினையை இன்று திங்கள் கிழமை உரிய அதிகாரிகள் பார்வையிடுவதாகவும் அது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.
Post a Comment