இலங்கையில் ATM இலிருந்து, சூசகமாக கொள்ளையிடப்பட்ட பணம்
மெதகம நகரிலுள்ள இலங்கை வங்கிக் கிளையின் பணம் மீளப்பெறும் இயந்திரத்தில் (ATM) இலிருந்து மிக சூசகமாக பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக மெதகம பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கிளையின் ATM இயந்திரத்திலிருந்து 57 இலட்சத்து 75 ஆயிரத்து 800 ரூபா (ரூபா 5,775,800) பணம் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வெள்ளிக்கிழமை (20) குறித்த வங்கியை மூடும் பொழுது, அதன் ATM இயந்திரத்தில் ரூபா 90 இலட்சத்திற்கும் அதிகமான பணம் வைப்பிலிடப்பட்டதாக வங்கியின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இன்று (22) குறித்த வங்கிக் கட்டடம் சுத்தப்படுத்தும் பணிகளுக்காக திறக்கப்படும்போது, வங்கியுடன் இணைந்தவாறு காணப்பட்ட வர்த்தக நிலையத்தின் உரிமையாளர், சந்தேகத்திற்கிடமான இருவரின் நடமாட்டம் தொடர்பாக தமது வர்த்தக நிலைய கண்காணிப்பு கமெராவில் (CCTV) பதிவாகியுள்ளதாக, வங்கி முகாமையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, மெதகம பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, மேற்கொண்ட சோதனைகளின்போது, குறித்த இருவரால் மேற்கொள்ள கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.
குறித்த வங்கிக் கிளையின் பிற்பகுதியிலுள்ள இரும்பு கம்பிகளாலான ஜன்னல்களை களற்றி வங்கியினுள் நுழைந்து அதன் ATM இயந்திரத்தை வங்கியின் உட்பகுதியால் உடைத்து பணத்தை கொள்ளையிட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (20) இரவு இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, வங்கி கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமெரா தொகுதியை மாற்றியமைத்துள்ளதோடு, அதன் காட்சிகள் பதிவாகும் இயந்திரத்தையும் எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதகம பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு, குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
Post a Comment