முஸ்லிம்களின் 50 பூர்வீக இடங்களில், விகாரைகளை நிர்மாணிக்க நடவடிக்கை
'எழுக தமிழ்' என்பது முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை முன் வைக்கும் நிகழ்வல்ல என காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் (நளீமி) தெரிவித்தார்.
நேற்று முன்தினம் இடம் பெற்ற இந்திய ஊடகவியலாளருடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கட்டிடத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எழுக தமிழ் என்பது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளிக் கொணரும் நிகழ்வாகும்.
அதில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாசைகளை முன்வைக்க முடியாது. அதனால் முஸ்லிம்கள் எழுக தமிழுக்கு ஆதரவு வழங்க முடியாது.
சந்தர்ப்பத்திற்கேற்ப முஸ்லிம்களை இணைத்துப் பேசுவதை விடுத்து முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளையும் முஸ்லிம்களின் உணர்வையும் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு போதும் வட கிழக்கு இணைப்புக்கு எமது ஆதரவு கிடையாது. வடக்கு வேறாகவும் கிழக்கு வேறாகவும் தனித்தனியே பிரிந்திருக்க வேண்டுமென்பது எமது கோரிக்கையாகும்.
வட மாகாண முதலமைச்சர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் நிகழ்வில் முஸ்லிம்களைப் பற்றி எதுவும் கூறவில்லை. அரசியல் ஆதாயத்திற்காக இந்த நிகழ்வு மேற்கொள்ளப்படுகின்றது.
முஸ்லிம்கள் வடக்கு கிழக்கில் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேசவிருக்கின்றோம். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படவில்லை. வட மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் இன்றும் சரியாக இடம் பெறவில்லை.
அதே போன்று இந்திய அரசாங்கத்தினால் வட மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் சரியான முறையில் வீடுகள் பகிர்ந்தளிக்கப்படவில்லை. இது போன்ற பல் வேறு பிரச்சினைகள் முஸ்லிம் மக்களிடமிருக்கின்றன.
இவை தொடர்பிலும் எமது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் நிலைப்பாடு தொடர்பிலும் நாம் பேசவிருக்கின்றோம்.
முஸ்லிம்களை தனி இனமாக அங்கீகரிக்க வேண்டும், முஸ்லிம்களின் பிரச்சினைகளை தனியாக அடையாளப்படுத்தி அவற்றை தீர்த்து வைக்க வேண்டும், சகல பேச்சுவார்த்தைகளிலும் முஸ்லிம்களை தனித்தரப்பாக அங்கீகரிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளோம்.
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் காணிப் பிரச்சினை தொடர்பில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.
யுத்தத்திற்கு முன்னர் முஸ்லிம்கள் வசித்த அவர்கள் குடியிருந்த காணிகளுக்குள் தற்போது சென்று குடியமர முடியாத சூழ் நிலை இருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் தற்போது மிகவும் சொற்பமான நிலப்பரப்புக்குள்ளே வசிக்கின்றார்கள். விகிதாசாரத்திற்கேற்ப முஸ்லிம்களுக்கு காணி பகிர்ந்தளிக்கப்படவில்லை.
இதே போன்று கிழக்கு மகாணத்தில் 50க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் பூர்வீக இடங்களை தொல் பொருள் ஆராய்ச்சி என்று கூறி பௌத்த பெரும்பான்மையினர் சுவீகரித்து வருகின்றார்கள். அங்கு அவர்கள் திட்டமிட்ட வகையில் பௌத்த விகாரைகளையும் நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகள் ஒரு போதும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது என்றார்.
இதன் போது காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் பொறியியலாளர் ஏ.எம்.தௌபீக் உட்பட அதன் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
விடிவெள்ளி
Post a Comment