பௌத்த பிக்கு, நாடு கடத்தப்பட்டார் - 4 மணித்தியாலங்களாக நீடித்த முறுகல்
கோட்டே நாகவிஹாரையின் தலைமை குருவுக்கான போட்டியில் ஈடுபட்டிருந்த கொரியாவின் பிக்கு நேற்று -03- நாடு கடத்தப்பட்டார்.
குறித்த விஹாரையில் தங்கியிருந்த நிலையில் அவர் நேற்று இரவு அமைச்சர் எஸ். பி. நாவின்னவின் உத்தரவின் பேரில் நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித்த தேரருக்கு பின்னர் தாமே நாகவிஹாரையின் தலைமைக்குரு என்று அவர் தம்மை பிரகடனப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் விஹாரைக்கு சென்ற குடிவரவு அதிகாரிகள், அவரை மீரிஹன பொலிஸாரின் உதவியுடன் நாடு கடத்தினர்.
இதன்போது சுமார் நான்கு மணித்தியாலங்களாக அதிகாரிகளுக்கும் கொரிய பிக்கு யுங் மூன் ஒவ்வுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
எனினும் குடிவரவு அதிகாரிகள் அவரை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இனறு அதிகாலை 1.15 அளவில் கொரியாவுக்கு அனுப்பிவைத்தனர்.
குறித்த தென்கொரிய பிக்கு, 2000ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்த நிலையில் நான்காவது முறையில் வந்தபோது இலங்கையிலேயே தங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment