பேஸ்புக்கில் தவறான, தகவல் பரப்பினால் 3 ஆண்டுகள் சிறை - சுவிட்சர்லாந்து பொலிஸார்
சுவிட்சர்லாந்து நாட்டில் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் தவறான தகவல் பரப்பி நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுவிஸில் உள்ள Zug நகரில் சில தினங்களுக்கு முன்னர் 52 வயதான நபர் ஒருவரை இரண்டு பேர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த விவகாரம் பொலிசாரின் கவனத்திற்கு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இளம்பெண் ஒருவர் பேஸ்புக்கில் ஒரு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘நபர் தாக்கப்பட்டது போலவே என்னுடைய நண்பர் ஒருவரும் மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார்’ என பதிவு வெளியிட்டுள்ளார்.
இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததும் அவர்கள் உடனடியாக விசாரணையில் இறங்கியுள்ளனர்.
ஆனால், பொலிசார் விசாரணையில் இளம்பெண் தவறான தகவலை பேஸ்புக்கில் வெளியிட்டது நிரூபனம் ஆனது.
இது தொடர்பாக இளம்பெண்ணை நேரில் அழைத்து பேசிய பொலிசார் ‘சமூக வலைத்தளங்களில் தவறான தகவலை வெளியிட்டு பொலிசாரின் நேரத்தை வீணடித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்’ என எச்சரித்து அவரை அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், சமூக வலைத்தளங்களில் தேவையற்ற வதந்திகள் மற்றும் தவறான தகவல்களையும் பொதுமக்கள் பரப்பக் கூடாது என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment