கடலில் மூழ்கிய 3 ஜனாஸாக்களும் நல்லடக்கம் - திஹாரிய வரலாற்றில் மாபெரும் மக்கள்கூட்டம், ஸ்த்தம்பித்தது போக்குவரத்து
- எம்.ரி.அப்துல்லாஹ் -
மூதூரில் கடலில் மூழ்கி நேற்று முன்தினம் உயிரிழந்த திஹாரியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களின் ஜனாஸா நல்லடக்கம் திஹாரி மஸ்ஜிதுல் ரவ்ழா பள்ளிவாசல் மையவாடியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றுதலோடு நேற்று நடைபெற்றது.
திஹாரிக்கு அண்மையிலுள்ள கஹட்டோவிட்ட, உடுகொடை, ஒகொடபொல, ஹொரகொல்ல, கல்எலிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதுடன் ஆயிரக்கணக்கான தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களும் இந்த இளைஞர்களின் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டனர்.
திஹாரிய வரலாற்றில் ஒருபோதுமில்லாதவாறு இந்த ஜனாஸாவுக்கு மக்கள் கூடியதால் போக்குவரத்துக்காக திஹாரிய -ஊர்மனை வீதி பலமணி நேரம் மூடப்பட்டிருந்தது.
நேற்றுமுன்தினம் 23 ஆம் திகதி மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹபீப் நகர் கடலில் குளிக்கச்சென்ற திஹாரிய, மில்லகஹவத்த பகுதியைச்சேர்ந்த 19 வயதுடைய மொஹம்மட் நெளஷாட் உக்காஸா, 17 வயதுடைய காதர் ஹசன் அப்துல்லாஹ் மற்றும் 20 வயதுடைய மொஹம்மட் பாயிஸ் மொஹம்மட் இக்ராம் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தனர்.
நேற்றுமுன்தினம் மதியம் 1.15 மணியளவில் 7 இளைஞர்கள் கடலுக்கு குளிக்கச் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றது. குறித்த இளைஞர்கள் கடலில் மூழ்கிய நிலையில் அங்கிருந்த மீனவர்களின் முயற்சியின் பின்னர் மூவர் சடலமாகவும் ஒருவர் உயிருடனும் மீட்கப்பட்டனர்.
பின்னர் மூதூர் தளவைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த மூன்று ஜனாஸாக்களும் மூதூர் பிரிவிற்கான திடீர் மரண விசாரணை அதிகாரி நூருல் ஹக்கின் விசாரணையையடுத்து நேற்றுமுன்தினம் இரவு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து திஹாரிக்கு கொண்டுவரப்பட்ட ஜனாஸாக்கள் பெருந்திரளானோரின் பங்குபற்றுதலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையானது கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்று முடிந்த நிலையில், இஸ்லாமிய மார்க்க உபதேச நடவடிக்கைகளுக்காக தப்லீக் ஜமாஅத் நடவடிக்கைகளில் இந்த மூன்று பேர் உள்ளிட்ட மேலும் பலர் அடங்கிய குழுவொன்று மூதூர் பகுதிக்கு சென்றிருந்தபோது இச்சம்பவம் நேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
Inna Lilli wainnah llaihi rajiuun
ReplyDelete