ஜெனீவா கூட்டம் பெப்ரவரி 27 இல் ஆரம்பம் - அரசு உயர்மட்ட குழு செல்கிறது
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 24 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில் அக்கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பில் உயர்மட்ட தூதுக்குழுவினர் கலந்துகொள்வதற்கு தயாராகிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் இந்தக் கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பில் தலைமை வகித்து கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கையின் தூதுக்குழுவில் இடம்பெறவுள்ளனர்.
அத்துடன் ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை அலுவலகத்தின் பிரதிநிதிகளும் இலங்கை தூதுக்குழுவுடன் இணைந்து கொள்ளவுள்ளனர்.
ஜெனிவாவிலுள்ள இலங்கை அலுவலகத்தின் பிரதிநிதிகள் தற்போதிருந்தே 34 ஆவது கூட்டத் தொடருக்கான ஆயத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் இலங்கை பிரதிநிதிகள் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழுவானது இம்முறை ஜெனிவாக் கூட்டத்தொடரில் இலங்கையின் சார்பில் கலந்து கொள்ளவுள்ளது. விசேடமாக இம்முறை கூட்டத் தொடரானது இலங்கைக்கு மிக வும் முக்கியமானதாகும்.
அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் எழுத்துமூல அறிக்கையை வெளியிடவிருக்கிறார்.
அந்தவகையில் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் இலங்கை தூதுக்குழுவானது செயிட் அல் ஹுசைனின் எழுத்துமூல அறிக்கைக்கு பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆற்றவுள்ள உரையில் இலங்கையானது ஆட்சிமாற்றத்தின் பின்னர் எவ்வாறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தது என்பது தொடர்பாகவும் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்தும் விளக்கமளிப் பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டியதன் அவசியம் தொடர்பாக இம்முறை கூட்டத் தொடரில் சர்வதேச நாடுகளும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் வலியுறுத்தும் என தெரிவிக் கப்படுகிறது.
ஆனால் அவற்றுக்கு இலங்கை அரசாங் கத்தின் சார்பில் பதிலளிக்கப்படவுள்ளது. விசேடமாக வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்றும் நம்பகர மான உள்ளகப் பொறிமுறையை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும் இலங்கையின் தரப்பில் வலியுறுத்தப்படு மென நம்பப்படுகிறது.
Post a Comment