கொழும்பில் 25 வருடங்களாக, அடிமையாற்றிய பெண்
தனது 18 ஆவது வயதில் காணாமல் போனதாக கூறப்படும் பெண் ஒருவர், கொழும்பிலுள்ள வீடு ஒன்றில் அடிமையாக பணியாற்றி வந்ந்த நிலையில் சுமார் 25 வருடங்களின் பின்னர் தனது வீட்டை தேடிவந்த சம்பவமொன்று கம்பளை, கிராவுல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இப்பெண்ணுக்கு தற்போது 43 வயதாகின்ற நிலையில், இவர் காணாமல் போனதையடுத்து, அவரின் குடும்பத்தினருக்கு வழங்கும் நட்டஈட்டு பணத்தையும் கங்கஇஹலகோரள பிரதேச செயலகத்திடமிருந்து அவரது குடும்பத்தார் பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1989 ஆம் ஆண்டு நிலவிய அசாதாரண சூழ்நிலையில், இப்பெண் திருமணம் முடித்து தொஹொமட பிரதேசத்தில் தனது கணவனுடன் வசித்து வந்த நிலையில் இரண்டு மாதங்களின் பின்னர் இவரது கணவர் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டதனையடுத்து மறுபடியும் தனது தாயின் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
இது தொடர்பில் அப்பெண் தெரிவிக்கையில்,
தான் வீட்டுக்கு திரும்பி இரண்டொரு நாளில் தனது கணவனின் பெரியம்மாவின் மகள் ஒருவர் நாவலப்பிட்டியிலுள்ள அவரது வீட்டுக்கு அழைத்து சென்றதாகவும் அதன் பின்னர் ஆறுதலுக்காக சுற்றுலா செல்வோம் எனக் கூறி அவர் தன்னை கொழும்புக்கு அழைத்து சென்று வீடு ஒன்றில் வேலைக்கமர்த்தியதாகவும் தெரிவித்தார்.
பின்னர் குறித்த வீட்டார் தன்னை சுமார் 25 வருடங்களாக அடைத்துவைத்து வேலை வாங்கியதுடன் வீட்டுக்கு செல்வதற்கு கூட அனுமதிமறுத்து அடிமைப்படுத்தி வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது தந்தை மற்றும் கடற்படையில் பணியாற்றி வந்த தனது சகோதரனின் மரணம் குறித்து அவ்வீட்டார் தனக்கு தெரியப்படுத்திய போதிலும் தன்னை அம்மரண சடங்குகளில் கலந்து கொள்வதற்கு கூட அனுமதித்திருக்கவில்லை என்றார்.
இந்நிலையில் கடந்த 17 ஆம் திகதி கம்பளை, கிராவுல்ல பிரதேசத்திலுள்ள தனது வீட்டுக்கு திரும்பியிருந்ததன் பின்னர் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று நேற்றைய தினம் அவர் வெளியேறியிருந்த நிலையில், தெல்கந்த - கொட்டாவைக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள, தன்னை அடிமைப்படுத்தி வைத்திருந்த வீட்டார் மீது சட்டநடவடிக்கை எடுக்குமாறு நாவலப்பிட்டிய பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு அளித்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் கொட்டாவ பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்தியுள்ளதாக நாவலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(ரெ.கிறிஷ்ணகாந்)
Post a Comment