Header Ads



ஆடைகளைக் கொடுத்து போதைப்பொருள் வாங்கிய 13 பேர் கைது - கொச்சிக்கடையில் சம்பவம்

-எம்.இஸட்.ஷாஜஹான்-

நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் பிரிவில் ஹெரோய்ன் போதைப்பொருள் விற்பனை செய்த பிரதான நபரையும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 13 பேரையும் கைதுசெய்துள்ளதாகவும் போதைப்பொருளை விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த ஜீப் வண்டியையும் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோய்னையும் கைப்பற்றியுள்ளதாகவும் கொச்சிக்கடைப் பொலிஸார், இன்று (26) தெரிவித்தனர். 

இது தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸ் நிலையக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவிக்கையில், 

கொச்சிக்கடை பொலிஸ் பிரிவில் ஹெரோய்ன் பாவனையில் ஈடுபடுவேரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கை, நேற்று ஆரம்பிக்கப்பட்ட போது, ஹெரோய்ன் பாவனையில் ஈடுபட்ட 13 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் 18 முதல் 25  வயதுக்குட்பட்டவர்களாவர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கட்டானைப் பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யும் ஒருவரிடமிருந்தே, கைதுசெய்யப்பட்டவர்களில் பொரும்பாலானோர், ஹெரோய்னை கொள்வனவு செய்து வந்துள்ளமை தெரியவந்தது. 

இதனையடுத்து, போதைப்பொருள் பாவனையாளர்கள் மத்தியில் 'நியபொத்தா' என அழைக்கப்படும், வடக்கு கட்டானைப் பிரதேசத்தைச் சேர்ந்த, ஜுவன்கே அசங்க மாலன் பிரதீப் பெர்ணான்டோ (வயது 36) எனும் பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார். இவரிடமிருந்து 2,300 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டதுடன், போதைப்பொருள் விற்பனை செய்வதற்காக இவர் பயன்படுத்திய 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான மைக்ரோ கைரோன் ரக ஜீப் வண்டியும் கைப்பற்றப்பட்டது. 

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் சிலர், போதைப்பொருள் வாங்குவதற்குப் பணம் இல்லாத சந்தர்பங்களில் தமது ஆடைகளைக் கொடுத்து, பிரதான சந்தேகநபரிடம் போதைப்பொருளைக் கொள்வனவு செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.