இலங்கையில் இன்று, 10 பேருக்கு மரண தண்டனை
இரண்டு பேரை கொலை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட 10 பேருக்கு பதுளை மற்றும் மாத்தறை மேல் நீதிமன்றங்கள் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளன. இவர்களில் 6 பேருக்கு பதுளை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
கந்தகெட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்நோக்கி அந்த பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர், மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், பொலிஸ் பாதுகாப்பு உதவியாளர் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரி என 6 பேருக்கு பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி ரோஹன ஜயவர்தன மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
புதையல் தோண்டி சம்பவம் தொடர்பாக 2014 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 18 வயதான பொருன்ஹேவா சந்துன் மாலிங்க என்ற இளைஞன் கொல்லப்பட்ட சம்பவத்தில் இவர்கள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனிடையே மாத்தறை மேல் நீதிமன்றம் 4 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2004ஆம் ஆண்டு கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கி ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைகளில் ஒருவர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment