'அரச தரப்பிலிருந்து 10 பேர், மஹிந்தவுடன் இணைந்துகொள்வர்'
சுயாதீன எம்.பியாகச் செயற்படுவதற்கு அத்துரலிய ரத்தன தேரர் எடுத்துள்ள முடிவை வரவேற்றுள்ள மஹிந்த அணி, மேலும் 10 பேர் அரசிலிருந்து விலகி விரைவில் பொது எதிரணியுடன் இணைவர் என்றும் ஆருடம் கூறியுள்ளது.
அரச பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் உறுப்பினரும் ஐக்கிய
தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்தன தேரர், தான் சுயாதீன எம்.பியாகச் செயற்படவுள்ளார் என நேற்றுமுன்தினம் அறிவிப்பு விடுத்தார். இதையடுத்து அரசியல் களத்தில் இவ்விடயம் பேசும்பொருளாக மாறியுள்ளது.
ரத்தன தேரரின் முடிவை ஆதரித்துக் கருத்து வெளியிட்ட ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எம்.பி.,
“நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை அறிந்துள்ளதாலேயே ரத்தன தேரர் இப்படியொரு முடிவை எடுத்துள்ளார். காலம் கடந்தாவது அவர் இப்படியொரு முடிவை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. பொது எதிரணி பக்கம் வரமாட்டார் என அவர் கூறுகின்றார். வரவேண்டாம். வந்தால் மக்கள் எமக்கும் கல் அடிப்பார்கள்” என்றார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட பிரசன்ன ரணதுங்க எம்.பி.,
“தான் அன்று செய்தது தவறு என்பதை தேரர் இன்று ஏற்றுக்கொண்டுள்ளார். அவரின் முடிவு வரவேற்கத்தக்கது. அரசுடன் தனக்குப் பிரச்சினை இல்லை எனக் கூறுகின்றார். அப்படியானால் எதற்காக சுயாதீனமாக செயற்படும் முடிவை எடுக்க வேண்டும். அரசு எந்தக்கட்டத்தில் இருக்கின்றது என்பது இதன்மூலம் உறுதியாகின்றது” – என்றார்.
“பெளத்த தேரர்களுக்கு இந்த அரசு மதிப்பளிப்பதில்லை. அவர்களைச் சிறையில் அடைக்கின்றது. இனி ரத்தன தேரரையும் எம்.சி.ஐ.டி. அழைக் லாம். எனவே, பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். எதிர்வரும் வாரம் நுகேகொடையில் நடைபெறவுள்ள மாநாட்டின்போது அரச தரப்பிலிருந்து 10 பேர் இணைந்துகொள்வர்” என்றார் மஹிந்த ஆதரவு அணியின் மற்றுமொரு எம்.பியான இந்திக்க அனுருத்த.
Post a Comment