Header Ads



SLMC செயலாளர் யார்..? மீண்டும் சிக்கல் - தேர்தல் ஆணைக்குழு விசாரணை

(அஸ்லம் எஸ்.மௌலானா)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பில் எழுந்த்துள்ள சர்ச்சை குறித்து நேரடி விசாரணைக்கு வருகை தருமாறு சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இவ்விசாரணை நாளை வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் தேர்தல்கள் திணைக்களத்தில் இடம்பெறவிருக்கிறது.

இதற்காக கட்சியின் தேசியத் தலைவர்- அமைச்சர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி, புதிய செயலாளராக பரிந்துரைக்கப்பட்டுள்ள மன்சூர் ஏ.காதர் ஆகிய மூவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாட்டில் கட்சியின் யாப்பு திருத்தப்பட்டு, செயலாளர் நாயகம் பதவிக்கு மேலதிகமாக உயர் பீட செயலாளர் எனும் புதிய பதவி ஒன்று உருவாக்கப்பட்டதுடன், தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் போன்றோருடனான தொடர்புகளை பேணும் பொறுப்பு உயர் பீட செயலாளருக்கு உரித்தாக்கப்பட்டது.

இதன் பிரகாரம் கட்சியின் செயலாளர் நாயகம் எனும் பதவி அதிகாரமற்றதாக மாற்றப்பட்டது. அது மாத்திரமல்லாமல் கட்சியின் செயலாளர் பதவி என்பது நேரடி அரசியலில் ஈடுபடாத உத்தியோகத்தர் அந்தஸ்த்துக்குரியதாக மாற்றப்பட்டதுடன் அவர் தலைவரினால் நியமிக்கப்படுவார் எனவும் அவருக்கு கட்சியினால் மாதாந்த சம்பளம் வழங்கப்படும் எனவும் அந்த யாப்பு திருத்தத்தில் முன்மொழியப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து கட்சியின் உயர் பீட செயலாளராக நியமிக்கப்பட்ட நிலைக்கு சம்மாந்துறையை சேர்ந்த ஓய்வுபெற்ற பல்கலைக்கழக பதிவாளரான மன்சூர்.ஏ.காதர், கட்சியின் செயலாளர் எனும் பதவி நிலைக்கும் கட்சியின் தலைவரினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

இதனை அங்கீகரித்த தேர்தல்கள் ஆணைக்குழு, அதன் உத்தியோகபூர்வ கட்சிகளின் செயலாளர்கள் பட்டியலில் ஹசன் அலியின் பெயரை நீக்கி விட்டு, மன்சூர் ஏ.காதரின் பெயரை உள்வாங்கியிருந்தது. 

எனினும் செயலாளர் நாயகமான ஹசன் அலி, கட்சியின் பேராளர் மாநாட்டில் இப்படியொரு தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் தானே தொடர்ந்தும் அதிகாரபூர்வமான செயலாளராக பதவி வகித்து வருவதாகவும் புதிய நியமனம் என்று கட்சித் தலைவரினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை போலியானது எனவும் அதனை தான் ஆட்சேபிப்பதாகவும் எழுத்து மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியாவுக்கு கடிதம் ஒன்றை கையளித்திருந்தார்.

இதனை பரிசீலித்த மஹிந்த தேசப்பிரிய, அது தொடர்பில் விளக்கமளிக்குமாறு கட்சித் தலைவருக்கு அறிவுறுத்தியிருந்தார். எனினும் திருப்திகரமான பதில் கிடைக்கப்பெறாமையினால் தலைவர், செயலாளர் நாயகம், புதிய செயலாளர் ஆகிய மூவரையும் ஒரே நேரத்தில் நேரடி விசாரணை ஒன்றுக்கு வருகை தருமாறு கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் மஹிந்த தேசப்பிரிய அழைப்பு விடுத்திருந்தார்.

எனினும் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமுக்கு அனுப்பட்ட அக்கடிதத்தின் பிரதி ஹசன் அலிக்கு கிடைக்கவில்லை என்பதுடன் தலைவர், புதிய செயலாளர் ஆகிய இருவரும் சென்று தன்னிலை விளக்கமளித்திருந்தனர். அதனை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய கொள்கையளவில் ஏற்றுக் கொண்டிருந்தார்.

அதன் பின்னர் தனக்குரிய கடிதம் இருட்டடிப்பு செய்யப்பட்டதாக தெரிவித்து மீண்டும் ஒரு ஆட்சேபனை கடிதம் ஒன்றை மஹிந்த தேசப்பிரியவுக்கு ஹசன் அலி அனுப்பியிருந்தார்.

இதனைத் தொடர்ந்தே இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் கட்சியின் செயலாளர் யார் என்பதை உறுதிப்படுத்துமாறும் இல்லையேல் கட்சி செயற்பாடு சிக்கல் நிலைக்கு வரும் என்றும் அறிவுறுத்தி, காலக்கெடு ஒன்றும் விதித்து, ரவூப் ஹக்கீமுக்கு மஹிந்த தேசப்பிரிய  அவசரக் கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

அது தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று முன்தினம் புதன்கிழமை கட்சியின் உயர் பீடம் கூட்டப்பட்டு, விவாதிக்கப்பட்டது. அதில் ஹசன் அலி பங்கேற்கவில்லை. எவ்வாறாயினும் கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியில் தலைவர் ரவூப் ஹக்கீம், கடந்த பேராளர் மாநாட்டு தீர்மானங்கள் எனும் நிலைப்பாட்டை மீள உறுதிப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையிலேயே இன்று வெள்ளிக்கிழமை கட்சியின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி, புதிய செயலாளர் மன்சூர் ஏ.காதர் ஆகிய மூவரையும் ஒரே நேரத்தில் நேரடி விசாரணைக்கு வருமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்திருக்கிறது.

நேற்று இடம்பெற்ற உயர் பீடக் கூட்டத்தை புறக்கணித்திருந்த ஹசன் அலி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பையேற்று நாளைய நேரடி விசாரணைக்கு முகம் கொடுப்பார் என அவருக்கு நெருக்கமான வட்டாரம் உறுதிப்படுத்தியது.

3 comments:

  1. கபட நாடகம் ஆடும் தலைமைத்துவம்.

    ReplyDelete
  2. இந்த தலைமை உள்ளவரை இப்படியான சிக்கல்கள் மக்களுக்கு வரும் இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. படித்தவர்களும் புத்திஜீவிகளும் முன்வந்து இதை மாற்ற வேண்டும். பாமர மக்களுக்கு இதை பற்றி தெளிவூட்ட வேண்டும்.

    ReplyDelete
  3. Roshan உண்மைதான் , ஆனால் ஆதவன் எழுந்து வந்தான் பாடலைக் கேட்ட உடனேயே அனைத்தையும் மறந்து மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பாக மாறி கொரங்காக மர்த்தில் ஏறிடுவான்இந்தப் பாமரன்.
    தலைவா! நீ ராஜாடா !
    புத்திகெட்ட பாமரன்.

    ReplyDelete

Powered by Blogger.