“போயஸ் கார்டனில் இருந்து, அஸ்மினுக்கு வந்த அழைப்பு''
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு இளையராஜா பாடிய இரங்கல் பாடல் என்று ஒரு பாடல் இணையத்தில் வலம் வந்தது. ஆனால், அந்த பாடலுக்கும் இளையராஜாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த பாடலை எழுதியது இலங்கை கவிஞர் அஸ்மின் என்றும், இசையமைத்து பாடியது வர்சன் என்றும் பிறகு உறுதிபடுத்தப்பட்டது.
அதன் பின் பிரபலமான இந்த பாடல், ஜெயலலிதாவின் சமாதியில் இன்றுவரை ஒலிக்கிறது. சமாதியில் ஒலித்த பாடல் ஒரு நாள் போயஸ் கார்டனிலும் ஒலிக்க, பாடலாசிரியர் அஸ்மினுக்கு போயஸ் கார்டனில் இருந்து அழைப்பு வந்துள்ளது. விரைவில் நேரில் வந்து சந்திக்க சொல்லியிருக்கிறார்களாம். மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள அஸ்மினை தொடர்பு கொண்டோம்.
“நாங்கள் தயாரித்த பாடல், இளையராஜா அம்மாவிற்காக உருவாக்கிய இரங்கல் பாடல் என்று இணையமெங்கும் பரவிய நிலையில், அந்த பாடலின் சொந்தக்காரர் யார் என்பதை முதலில் விகடன்தான் செய்தி வெளியிட்டது. அதன் பின்புதான் எங்கள் பெயர் வெளியில் தெரிந்தது. அதற்காக முதலில் நான் உங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
ஆமாம், அழைப்பு வந்தது உண்மை தான். போயஸ் கார்டனில் இருந்த ஒரு முக்கிய பிரமுகர்தான், இந்த பாடலை கார்டனுக்கு கொண்டு போய் சேர்த்திருக்கிறார். அவரிடம்தான் இந்த தகவலை சொல்லியிருக்கிறார்கள். பிறகு அவர்தான் எங்களுக்கு போன் செய்து இந்த செய்தியை தெரிவித்தார். அவருக்கும் எங்களது மிகப்பெரிய நன்றிகள். நான் தற்போது இலங்கையில் இருக்கிறேன். நாங்கள் எப்போது போயஸ் கார்டன் செல்வது என்று இன்னும் முடிவு எடுக்கவில்லை.
நான் இந்த தகவலை எனது முகநூலில் பதிந்தவுடன் பலரும் இது அரசியல் சார்ந்த ஒரு நிகழ்வாக சென்றுவிடும் என்று அவர்களது கருத்தை தெரிவித்தனர். ஆனால், இது அரசியல் சார்ந்த ஒரு நிகழ்வு கிடையாது. நாங்கள் அதிமுகவிற்காக இந்த பாடலை உருவாக்கவில்லை. ‘அம்மா’ என்ற ஒரு நல்ல உள்ளத்திற்காகத்தான் இந்த பாடலை உருவாக்கினோம். இன்று அந்த பாடல் ‘அம்மா’ வசித்த இல்லத்திற்கே சென்றிருக்கிறது. இந்த அழைப்பு எங்கள் படைப்பிற்கு கிடைத்த பாராட்டு. அதனால் கண்டிப்பாக நாங்கள் போயஸ் கார்டனுக்குச் செல்வோம்.
இன்று வரைக்கும் இந்த பாடலை பாடியது இளையராஜா என்றுதான் பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள். எனக்கென்று ஒரு அங்கிகாரம் கிடைக்கவில்லை. ‘நான்’, ‘அமரகாவியம்’, ‘சும்மாவே ஆடுவோம்’ போன்ற படங்களுக்கு நான் பாடல் எழுதியிருந்தாலும், அம்மாவிற்காக நான் எழுதிய இந்த இரங்கல் பாடல் தான் பலரின் காதுகளுக்கு எட்டியுள்ளது. ஆனால், அது என் பெயரோடு சென்று சேரவில்லை என்பதுதான் வருத்தம். விரைவில் எனக்கான அங்கிகாரம் கிடைக்கும்” என்று நம்பிக்கையுடன் பேசி முடித்தார், இலங்கை கவிஞர் அஸ்மின்.
Post a Comment