அலெப்போ மக்களுக்காக, இலங்கை முஸ்லிம்கள் துஆப் பிரார்த்தனை
சிரியா அலெப்போ நகர் யுத்த நகரமாக ஆனதையிட்டு அங்குள்ள மக்கள் பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்தும், அகதிகளாகியும் நிர்கதியாகியுள்ளனர். இந்நிலையைக் கவனத்தில் கொண்டு கம்பளை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் கஹட்டபிட்டிய ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகிகளின் ஏற்பாட்டில் கடந்த 21.12.2016 அன்று புதன்கிழமை இஷாத் தொழுயையடுத்து கஹட்டபிட்டிய ஜும்ஆ மஸ்ஜித் வரவேற்பு மண்டபவத்தில் ஒரு துஆ மஸ்லிஸ் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பொது மக்கள், மத்ரஸா மாணவர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் என சுமார் 1000 பேர்கள் வரை கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை ஜம்இய்யாவின் உதவிச் செயலாளர் அஷ்-ஷைக் ஷாபி இஹ்சானி அவர்கள் நெறிபடுத்தினார். ஹாபிழ் எம்.ஜே.அப்துர் றஹ்மான் அவர்களுடைய கிராஅத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாயின. தொடர்ந்து தலைமையுரை நடைபெற்றது. அதனை கம்பளை ஜம்இய்யாவின் தலைவர் அஷ்-ஷைக் ரீ.ஹைதர் அலி அவர்கள் நிகழ்த்தினார்கள். அவர் தமதரையில்:
'நாம் இங்கு இஸ்லாமிய சகோதரத்துவ உணர்வோடு கூடியுள்ளோம். 'ஒரு விசுவாசி இன்னுமொரு விசுவாசிக்கு ஒரு கட்டிடத்தைப் போல' என்ற நபிமொழியின் அடிப்படையில் சிரியா முஸ்லிம்களுக்கு குறிப்பாகவும், சர்வதேச முஸ்லிம்களுக்காகவும் மற்றும் நம்நாட்டில் சாந்தி, சமாதானம், சகவாழ்வு உருவாவதற்கும் நாம் பிரார்த்தனை செய்வது எமது கடமையாகும். முஸ்லிம்களாகிய நாம் எப்போதும் இந்நாட்டை நேசிக்கக் கூடியவர்கள், இது எமது நாடு. வரலாறு நெடுகிலும் நாம் இந்நாட்டுக்கு விசுவாசமுள்ளவர்களாகவே நடந்திருக்கிறோம்' எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்தும், சிரியாவில் என்ன நடக்கிறது? எமது கடமை என்ன? என்ற தொணிப் பொருளில் அல்-மனார் தேசிய பாடசாலை போதனாசிரியர் சகோ. நியாஸ் ஆளுஊ அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். தொடர்ந்து இம்இய்யாவின் உப தலைவர் பீ.எம்.ஹுஸைன் தீன் அவர்களின் துஆப் பிரார்த்தனை நடைபெற்றது. இறுதியாக அஷ்-ஷைக் ஐ.இர்பாத் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே முடிவுற்றது.
இந்நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடாத்த ஒத்துழைப்புக்களை வழங்கிய ஜம்இய்யாவின் அங்கத்தவர்கள், கஹட்டபிட்டிய மஸ்ஜித் நிர்வாகிகள், வாலிபர்கள் சகலருக்கும் தான் நன்றி தெரிவிப்பதாக ஜம்இய்யாவின் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.ரியாஸ் முஹம்மத் தெரிவித்துள்ளார்.
Post a Comment