Header Ads



உணர்ச்சி பூர்வமான நடவடிக்கைகளின் பின்னால், இழுபட்டுப் போகும் அபாயம்

"கடந்த 30 வருட காலமாக பல வழிகளிலும் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களினால் சாதிக்க முடியாத பலவற்றை இராஜதந்திர ரீதியாக அடுத்த சமூகங்கள் சாதிக்கின்ற நிலை நமக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். இனவாத சக்திகளை கையாளும் விடயத்தில் உணர்ச்சி வசப்பட்ட பேச்சுக்களுக்கும் நடவடிக்கைகளுக்கும்  முக்கியத்துவமளிக்காமல் அறிவு பூர்வமாகவும் இராஜ தந்திரமாகவும் இதனைக் கையாளுகின்ற ஒருங்கிணைந்த ஒரு வேலைத் திட்டமொன்று அவசரமாக நம்மத்தியில் தேவைப்படுகின்றது" என நல்லாட்டசிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக நாட்டில் அதிகரித்து வரும் இனவாத சக்திகளின் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. NFGG தவிசாளரின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிள்ளதாவது,

"இனவாத நடவடிக்கைகளை நிறுத்துவதில் இந்த அரசாங்கமும் தொடர்ந்தும் தவறி வருவதானது, நாட்டின் சமாதானத்திலும் சமூக நல்லிணக்கத்திலும் உண்மையான அக்கறை கொண்டுள்ள அத்தனை பேரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது. இந்த நிலையில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதிலும் சமாதானத்தைக் கடடியெழுப்புவதிலும் அரசாங்கத்திற்கு இருக்கின்ற பொறுப்பினை பல வழிகளிலும் உணரத்தி உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ளச் செய்வதற்கான நடவடிக்கைகளை முஸ்லிம் சமூகமும் மிகக் கவனமாக மேற்கொள்ள வேண்டும்.

 இச்சந்தர்ப்பத்தில் இரண்டு விடயங்கள் தொடர்பில் நாம் தெளிவுடனும் முன்னெச்சரிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

 முதலாவதாக, கடந்த காலங்களில் தமது சொந்தத் இலாபங்களுக்காக இனவாத சக்திகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும்  ஆதரவு வழங்கியவர்களின் நடவடிக்கைகள் பற்றி கவனமான ஒரு மதிப்பீடு நமக்கு அவசியமாகும். இனவாத சக்திகளை உருவாக்கி வளர்த்து பாதுகாப்பதில் கடந்த அரசாங்கம் எவ்வாறு நேரடியாக பங்களிப்புச் செய்தது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

 நமது பொருளாதாரமும் நமது மக்களும் அழிந்து பேரவலங்களை சந்தித்த சந்தர்ப்பங்களிலும் கூட தமக்கான சகல சௌபாக்யங்களையும் அனுபவித்துக் கொண்டு, அதற்கெதிராக எதுவும் வாய் திறக்காமலிரந்து கடந்த அரசாங்கத்தைப் பாதுகாக்க இறுதிவரை பாடுபட்ட சிலர் இப்போது மக்களை உணர்ச்சி வசப்படுத்தும் வகையில் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த கால வரலாறுகளையும் எதிர்கால அபாயங்களையும் மிக இலகுவாக மறந்து விட்டு நிகழ்கால நிலமைகளை மாத்திரமே சிந்திப்பதனை வழக்கமாகக் கொண்ட சிலர் அந்த உணர்ச்சி பூர்வமான நடவடிக்கைகளின் பின்னால் இழுபட்டுப் போகும் அபாயம் நிறையவே இருக்கிறது. 

 இங்கு ஒன்றை நாம் மறந்து விடக்கூடாது. கடந்த அரசாங்கமே இனவாத சக்திகளை உருவாக்கியது; வளர்த்தது பாதுகாத்தது; அதன் தாக்கம் இன்று வரை தொடர்கிறது. ஆனால் அழுத்கம போன்ற அவலங்களின் போது கூட வாய் திறக்காத இவர்கள் இப்போது உரத்துப் போசுவதன் உள்நோக்கம் என்ன என்ற அவதானமும் முன்னெச்சரிக்கையும் எப்போதும் எம் மத்தியில் இருக்க வேண்டும்.

 அடுத்ததாக, தற்போதைய சூழ்நிலையில் இனவாத சக்திகளை கட்டுப்படுத்துவதற்கான அறிவுபூர்வமான அணுகுமுறைகள் என்ன என்பது பற்றி முஸ்லிம் சமூகம் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

 சட்டம் ஒழுங்கானது பாரபட்சமற்ற முறையில் நிலை நாட்டப்படுகின்ற சூழ்நிலையே நமக்குப் பாதுகாப்பானது. இப்போது நாட்டில் இருக்கின்ற சட்டங்கள் இனவாத சக்திகளை கட்டுப்படுத்துவதற்கு போதுமானவைகளாகும். ஆனால் அவற்றை பாரபட்சமற்ற முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறிவருகிறது என்பதே அடிப்படைப் பிரச்சினையாகும். குறிப்பாக அரசியல் வாதிகளும் சில பௌத்த மதகுருமார்களும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற போக்கும் மனோநிலையும் காணப்படுகிறது.

இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். அதற்கான சகல வழி அழுத்தங்களையும் அரசாங்கத்திற்கு ஏற்படுத்த வேண்டும். ஆனால், இதனை முஸ்லிம் சமூகம் கையாளும் போது தமது நலன் சார்ந்த விடயங்களில் மாத்திரம் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்படுவது பற்றி பேசுவதோடு மாத்திரம் நிறுத்திக் கொள்ளக்கூடாது. அப்படிச்செய்வதானது நம்மை ஒரு சுயநலவாத சமூகமாகத் தொடர்ந்தும் அடையாளப்படுத்துவதற்கே உதவும்.

 எனவே, நாட்டின் சகல விடயங்களிலும் சட்டம் ஒழுங்கிற்காகக் குரல் கொடுப்பதில் முன்னணியில் நிற்பவர்களாக நாம் இனிமேலாவது மாற வேண்டும். இதற்கான சகல அழுத்தங்களையும் ஏனைய சமூகங்களோடு இணைந்து முஸ்லிம் சமூகம் கொடுக்க வேண்டும்.

 அடுத்ததாக இனவாத சக்திகளில் ஒரு சிலரை கைது செய்து சிறையில் அடைப்பதே பிரச்சினைக்கான ஒட்டு மொத்தத் தீர்வு என இவ்விடயத்தில் எமது பார்வையை சுருக்கிக் கொள்ளக்கூடாது. இதனை இராஜ தந்திரமாக எவ்வாறு கையாள முடியும் என்கின்ற ஒரு விரிவான பார்வை எமக்குத் தேவைப்படுகிறது.

 கடந்த 30 வருட காலமாக பல வழிகளிலும் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களினால் சாதிக்க முடியாத பலவற்றை இராஜதந்திர ரீதியாக அடுத்த சமூகங்களும் சாதிக்கின்ற நிலை நமக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

 இன்னுமொரு விடயத்தினையும் இங்கு நாம் மறந்து விடக்கூடாது . அதாவது , நம் சமூகத்தில் இருக்கும் அரசியல் அதிகாரங்களுக்குப் பஞ்சிமில்லை; அரசியல் பதவிகளுக்கும் பஞ்சமில்லை. ஆனால் அவையெதுவும் நமக்கு உரிய நேரங்களில் ஏன் பயனளிக்கத் தவறுகின்றன என சிந்திப்பதிலிருந்து எமது இராஜ தந்திர நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.

 எனவே, இனவாத சகதிகளை கையாளும் விடயத்தில் உணர்ச்சி வசப்பட்ட பேச்சுக்களுக்கும் நடவடிக்கைகளுக்கும்  முக்கியத்துவமளிக்காமல் அறிவு பூர்வமாகவும் இராஜ தந்திரமாகவும் இதனைக் கையாளுகின்ற ஒருங்கிணைந்த ஒரு வேலைத் திட்டமொன்று அவசரமாக நம்மத்தியில் தேவைப்படுகின்றது.

No comments

Powered by Blogger.