பொருளாதார நெருக்கடி ஏற்படும் ஆபத்து, மழை வேண்டி பிரார்த்திக்க ஜனாதிபதி கோரிக்கை
நாட்டில் தற்போது கடுமையான வரட்சியான காலநிலை நிலவுகிறது. இதனால் அடுத்த வருடம் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் ஆபத்து தோன்றியுள்ளது.
ஆகையால் நாட்டிலுள்ள அனைத்து மத வணக்கஸ்தலங்களில் விசேட பூஜை வழிபாடுகளை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.
எனவே மழையை வேண்டி நாட்டு மக்கள் அனைவரையும் பிரார்த்தணையில் ஈடுப்படுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் நாட்டில் 50 சதவீதம் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு செய்யப்படுகின்றது. இதனால் சூழல் முறையற்ற வகையில் மாசுபடுகின்றது. இது போன்ற சூழல் மாசடைவால் மழை வீழ்ச்சி குறைவாக பதிவாகியுள்ளது. நீர்த்தேக்கங்கள் அனைத்தும் இப்போது வற்றிப்போய் உள்ளன. இது பாரிய ஆபத்தான நிலைமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய நிர்மாணத்துறை விருது வழங்கும் நிகழ்வு நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,
நாட்டின் அபிவிருத்திக்கு நிர்மாணத்துறை மிகவும் முக்கியமாகும். நிர்மாணத்துறை வளர்ச்சியோடு தொழில்நுட்ப துறையும் வளர்ச்சி கண்டு வருகின்றது. எமது நாட்டிலும் நிர்மாணத்துறை முன்னேற்றகரமாக உள்ளது.
ஆனாலும் எமது நாட்டின் பரப்பளவுக்கும் சனத்தொகை வளரச்சிக்கும் ஏற்ற வகையில் நிர்மாணத்துறை வளர்ச்சி பேணப்பட வேண்டும். இலங்கையில் ஒவ்வொரு நாளும் சனத்தொகை அதிகளவில் வளர்ச்சி பெற்று வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.
எனவே இந்த சனத்தொகை வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் அபிவிருத்தி முன்னெடுக்கப்பட வேண்டும். இதன்போது அபிவிருத்தியின் எல்லையில் சனத்தொகை வளர்ச்சியும் நாட்டின் பரப்பளவும் ஒழுங்கு முறையில் பேணப்படுவது நிர்மாணத்துறை சார்ந்த நிறுவனங்களின் பிரதான பொறுப்பாகும்.
அமைச்சர்கள் பலர் வீதி அபிவிருத்திக்கு மணல் பற்றாக்குறை நிலவுவதாக என்னிடம் குற்றம்சுமத்தி வருகின்றனர். இது தொடர்பில் அதிகாரிகளை வைத்து ஆராய்ந்து பார்த்ததில் அனுமதிப் பத்திரத்துடன் மணல் அகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டாலும் 50 சதவீதம் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது.
இது பாரதூரமான விடயமாகும். மலைநாடுகளில் மலைகளை குடைந்து மணல் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் போது அதனால் ஏற்படும் சூழல் பிரச்சினையை இனங்காண்பது அவசியமாகும்.
எமது நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் பலர் இலங்கை சிங்கப்பூர், ஜப்பான், மேலைத்தேய நாடுகளை போன்று முன்னேற்றம் அடைய வேண்டும் என எதிர்பார்த்த போதிலும் எனது நோக்கம் அதுவல்ல. இலங்கையின் கலாசாரம், தரத்திற்கு ஏற்ப இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எனது இலக்காகும்.
இதேவேளை அபிவிருத்தியின் போது ஏனைய நாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். இதன்போது வெளிநாட்டு விமான நிலையங்களின் நிர்மாணத்தின் போது சீமெந்து, மணல் எந்தளவுக்கு பிரயோகம் செய்யப்பட்டுள்ளது என்பதனை நாம் ஆராய்ந்து பார்த்தால் மணல் பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைக்கு இலகுவான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும். இது குறித்து நாமும் ஆராய வேண்டும். எனவே மேற்குறித்த மூலப்பொருட்களின் தேவை குறைவாக உபயோகிக்கப்படுகின்றது.
எனவே சட்டவிரோத மணல் அகழ்வுகள் போன்றவையினால் தற்போது நாட்டின் மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ளது. இது பாரதூரமான பிரச்சினையாகும். இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் நீர்த்தேக்கங்கள் வற்றிப் போய் உள்ளன.
பல பிரதேசங்கள் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளன. இது மழைவீழ்ச்சிக்கான காலப்பகுதியாகும். குறிப்பாக பெரும்போக நெற்செய்கைக்கான தருணமாகும். ஆனாலும் மழை பெய்யவில்லை. இம்மாதம் உரிய மழை வீழ்ச்சி பதிவாக இல்லை என்றால் அடுத்த வருடம் பாரிய பொருளாதார நெருக்கடியை முகங்கொடுக்க வேண்டிய ஆபத்து தோன்றியுள்ளது.
ஆகையால் இன்றைய தினம் காலை பல அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடனும் பேசி மழையை வேண்டி மத வணக்கஸ்தலங்களில் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் மதத்தலைவர்களுக்கு கடிதம் அனுப்புமாறும் ஆலோசனை வழங்கியுள்ளேன். எனவே நாட்டு மக்கள் அனைவரும் மழை வேண்டிப் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும்.
அத்துடன் முன்னைய ஆட்சியின் போது நீதித்துறைக்கும் நிர்மாணத்துறைக்குக் பல்வேறு அழுத்தம் அரச நிறைவேற்று அதிகாரம் பிரயோகிக்கப்பட்டது. அரச நிறைவேற்று அதிகார உஷ்ணம் நீதித்துறையை தாக்கியது.
எனவே தற்போது அரச நிறைவேற்று அதிகார உஷ்ணம் நீதித்துறையை தாக்குவதில்லை. அதுபோலவே அரச நிறைவேற்று அதிகார உஷ்ணம் நிர்மாணத்துறையையும் தாக்காது. ஜனாதிபதியினால் நிர்மாணத்துறைக்கு எந்தவொரு அழுத்தமும் பிரயோகிக்கப்படமாட்டாது என்றார்.
MM.Minhaj
Post a Comment