தினமும் ஏழரை மணிநேரம் மூடப்படுகிறது, கட்டுநாயக்க விமான நிலையம்
சிறிலங்காவின் பிரதான அனைத்துலக விமான நிலையமான, பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் அனைத்துச் செயற்பாடுகளும், எதிர்வரும் ஜனவரி 6ஆம் நாள் தொடக்கம், காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணி வரை மூடப்படவுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், மூன்று மாதங்களுக்கு நாளாந்தம், ஏழரை மணித்தியாலங்கள் விமான நிலையம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2017 ஜனவரி 6ஆம் நாள் தொடக்கம், ஏப்ரல் 6ஆம் நாள் வரை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் பணிகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.
மூன்று பத்தாண்டுகளில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சுமார் 950,000 விமானங்கள் வந்து சென்றுள்ளன. எனினும் இங்கு ஒரே ஒரு ஓடுபாதை மாத்திரமே உள்ளது. இந்தக் காலப் பகுதியில் பாரிய புனமைப்பு பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.
1980களின் நடுப்பகுதியில், அப்போதைய தேவை கருதி, வடிவமைக்கப்பட்ட ஓடுபாதையே இப்போதும் பயன்பாட்டில் உள்ளது. இதனால், ஓடுபாதை தற்போதைய தேவைகளைக் கருத்தில் கொண்டு புனரமைக்கப்பட்டு விரிவாக்கப்படவுள்ளது.
புனரமைப்பு பணிகள் மே்றகொள்ளப்படும் போது, விமான நிலையம் மூடப்படவுள்ளது.
இதனால், கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக சேவைகளை நடத்தும் அனைத்து விமான சேவை நிறுவனங்களையும், பிற்பகல் 4.30 மணிக்கும், காலை 8 மணிக்கும் இடையில் சேவைகளை மாற்றியமைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
Post a Comment