Header Ads



நீதிமன்றம் வருமாறு, சுமணரத்ன தேரருக்கு அழைப்பு

பொது அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், ஆட்களைத் திரட்டி குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக, மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு, மட்டக்களப்பு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

பொது பலசேனா அமைப்பின் பேரணி மட்டக்களப்பில் நுழைவதற்கு நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில், மட்டக்களப்பு நகரில் கடந்த சனிக்கிழமை சிங்களவர்களை ஒன்று திரட்டிய, மங்களராமய  விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர்,  பேரணியாகச் செல்ல முயன்றார்.

காவல்துறையினரின் தடைகளுக்கு மேல் ஏறி நின்று ஆவேசமாக கூச்சலிட்ட அவர், இனவெறுப்பைத் தூண்டும் வகையில் கருத்துக்களையும் வெளியிட்டார். இதனால் மட்டக்களப்பு நகரில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில், அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் விதமாக ஆட்களைத் திரட்டி குழப்பம் விளைவித்தார் என்று, விகாராதிபதி மீது குற்றச்சாட்டை முன் வைத்து காவல்துறையினர், மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

அதனைப் பரிசீலித்த நீதிவான் கணேசராஜா, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரை எதிர்வரும் 14 ஆம் நாள் நீதிமன்றத்தில் முன்னிலையாகும்படி நேற்று உத்தரவிட்டார்.

இந்த அழைப்பாணை, நேற்று சுமணரத்ன தேரரிடம் கையளிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.