Header Ads



விடைபெறும் ஒபாமா நிர்வாகம், இஸ்ரேல் மீது கடும் சாடல்

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் இஸ்ரேலின் குடியேற்ற விரிவாக்கம் பலஸ்தீனத்துடன் அமைதி எதிர்பார்ப்பு மற்றும் இஸ்ரேலின் ஜனநாயக எதிர்காலம் இரண்டுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜோன் கெர்ரி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா தொடர்ந்தும் அமைதியாக இருக்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையிலான அமைதி முயற்சி குறித்து விடைபெறவிருக்கும் ஜனாதிபதி பராக் ஒபாமா நிர்வாகத்தின் எச்சரிக்கை உரையாகவே கெர்ரியின் பேச்சு அமைந்திருந்தது.

“குடியேற்றத் திட்டம் இஸ்ரேலின் எதிர்காலத்தை வரையறுப்பதாக உள்ளது. அவர்களது குறிக்கோள் தெளிவானது. அவர்கள் அகன்ற இஸ்ரேல் என்ற ஒரு தேசத்தை நம்புகிறார்கள்” என்று கெர்ரி குறிப்பிட்டார்.

“ஒரு தேசம் என்ற நிலைப்பாட்டை எடுத்தால் இஸ்ரேல் என்பது யூத அல்லது ஜனநாயகம் கொண்டதாக இருக்காது. அது உண்மையான அமைதி உடையதாகவும் இருக்காது” என்றும் அவர் எச்சரித்தார்.

மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைகளை கண்டிக்கும் ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சில தினங்களிலேயே வொஷிங்டன் டி.சியில் ஜோன் கெர்ரி கடந்த புதன்கிழமை இந்த உரையை ஆற்றி இருந்தார்.

இஸ்ரேல் மீதான பாதுகாப்புச் சபை தீர்மானத்திற்கு அமெரிக்கா வழமைக்கு மாறாக தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தாமை குறிப்பிடத்தக்கது.

எனினும் ஜோன் கெர்ரியின் உரையை இஸ்ரேலுக்கு எதிரான ஒரு பக்கச்சார்பானது என்று இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

கெர்ரியின் பேச்சு தனக்கு அதிருப்தி தருவதாகவும், குடியேற்றங்கள் மீது நிலையற்ற மற்றும் அதிக கருத்தூன்றி கவனம் செலுத்துவதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசுகையில், இஸ்ரேலின் உரிமைகள் நீடித்திருக்கக்கூடிய அங்கீகாரத்தை பாலஸ்தீனியர்கள் மறுத்து வருவதை மையப்படுத்தியே இந்த மோதல் இருப்பதாகவும், ஆனால் இந்த யதார்த்த உண்மை மீது கெர்ரி கவனம் செலுத்தவில்லை என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகி இருக்கும் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலுக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார். இஸ்ரேலை எச்சரிக்க அனுமதிக்க மாட்டேன் என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த மாதம் ஜனாதிபதி பதவியை ஏற்கும்வரை பொறுத்திருக்கும்படியும் அவர் இஸ்ரேலை கோரியுள்ளார்.

இதேவேளை பலஸ்தீன நிலத்தில் இஸ்ரேல் புதிய குடியிருப்புகளைக் கட்டுவதை நிறுத்தினால், அதனுடன் அமைதிப் பேச்சைத் தொடர தயார் என்று பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கூறியுள்ளார்.

ஜோன் கெர்ரியின் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையில், அப்பாஸ் இதனை தெரிவித்தார். அனைத்துலகச் சட்டத்துக்கும், அனைத்துலகச் சட்ட ரீதியான தீர்மானங்களுக்கும் உட்பட்ட அமைதிப் பேச்சை ஆரம்பிப்பதற்கு, பாலஸ்தீனம் தயாராக உள்ளதாய் அப்பாஸ் கூறினார்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பிரச்சினையில் ஆக்கிரமிப்பு பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் யூதக் குடியேற்றங்கள் பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக உள்ளது.

1967 இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்குப் பின் மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் சுமார் 140 குடியேற்றங்களில் 500,000க்கும் அதிகமான யூதர்கள் வாழ்கின்றனர். பலஸ்தீனம் நம்பும் தனது எதிர்கால தேசத்தின் நிலங்களாக இது உள்ளது.

சர்வதேச சட்டத்தின்படி இந்த குடியேற்றங்கள் சட்டவிரோதம் என்று கூறப்பட்டபோதும் இஸ்ரேல் அதனை மீறி செயற்பட்டு வருகிறது. 

2 comments:

  1. the all killing dogs are playing game, innocent Muslim doesn't understand , what can we do as a muslim they are pure but this cheaters are trying to cheat another way, this mater should be done long time ago, why now?
    when government is going to go soon to another Muslim blood lover's hand

    ReplyDelete
  2. US and WEST are very good at show cake piece to ARABS and MUSLIMS. Every time they play NEW DARAMA that makes the ARABS to trust them as GOOD peace makers. BUT They are the enemies of PEACE in ARAB world.

    SLEEPING and CHAIR LOVING ARAB leaders will keep sleeping and loving their chairs till another SALAHUDDEEN (SALADIN) arise from them.

    ReplyDelete

Powered by Blogger.