Header Ads



அரசாங்க ஊழியர்களுக்கு ''அன்பளிப்பு'' வழங்குவது குற்றம்

“அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால அன்பளிப்புகள், ஒருவகையில் ஊழல் செயற்பாடாகும்” என இலஞ்சம் மற்றும் ஊழல் ஒ​ழிப்பு விசாரணைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், “அன்பளிப்புகளை வாங்கும் அரசாங்க அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்படும்” எனவும் அவ்வாணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணைகள் ஆணைக்குழு, பொதுநிர்வாக அமைச்சுக்கும் ஏழு வணிக கூட்டுகளுக்கும் எச்சரித்துள்ளது.

பண்டிகை காலத்தில் அன்பளிப்பு பொதிகளை தனியார் கம்பனிகளிடமிருந்து அரச ஊழியர்கள் வாங்குவது  தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதன் அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

இது குறித்து இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமனே கூறியதாவது,

இது இலஞ்ச சட்டம் இல 19இன் கீழ் குற்றமாகும். எனவே, இக்குற்றச்சாட்டுதலை இலஞ்ச சட்டம் பிரிவு இல 25இல் கீழ் விசாரிக்க முடியும்.

சட்டப்படி,  அரச ஊழியர் யாரிடமிருந்தும் அன்பளிப்பு வாங்க முடியாது. அப்படி வாங்கியவர்கள் கம்பனிகளுக்கு கடமைப்பட்டு, அவற்றின் தேவைகளை நிறைவேற்ற முனைவர். இனி அன்பளிப்புகளை வாங்கும் அரசாங்க அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்படும் என்றார்.

மேலும், இது தொடர்பில் சுற்றறிக்கை ஒன்றை விடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனது சபை உறுப்பினர்களுக்கும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்தல் அனுப்பிவிட்டதாக இலங்கை வர்த்தக கூட்டமைப்பின் பணிப்பாளர் தாரா விஜயதிலக்க தெரிவித்தார்.

மேலும், இதனை ஏற்று நடப்பதும் நடக்காததும் அவர்களைப் பொறுத்தது எனவும் பணிப்பாளர் தாரா விஜயதிலக்க மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.