பொதுபல சேனா வன்முறை, ரயில் சேவை ரத்து
இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தை இன்று சனிக்கிழமை மேற்கொண்ட பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரோ உட்பட அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மாவட்டத்தின் வடக்கு எல்லையில் போலிஸாரால் தடுக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பௌத்த மரபுரிமைகளை பார்வையிட்டு அதனை பாதுகாப்பது தொடர்பாக அம்மாவட்டத்திற்கு தங்கள் செல்லவிருப்பதாக ஏற்கனவே பொது பல சேனாவினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இருந்தபோதிலும் அந்த அமைப்பினர் மட்டக்களப்பு நகரிலும் ஏனைய ஒரு சில இடங்களிலும் ஆர்பாட்டங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல்களும் வெளியாகியிருந்தன.
இதனையடுத்தே பொது பல சேனாவின் செயலாளர் உட்பட அந்த அமைப்பை சேர்ந்தவர்களுக்கு மாவட்டத்திற்குள் பிரவேசிக்க போலிஸாரால் ஏற்கனவே நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.
கொழும்பிலிருந்து வாகனங்களில் மட்டக்களப்பு நோக்கி பொலநறுவ வழியாக பயணித்த பொது பல சேனா அமைப்பினர் மாவட்டத்தின் வடக்கு எல்லையான ரிதிதென்னவில் தடுக்கப்பட்ட போது போலிஸாரின் தடையையும் மீறி அவர்கள் செல்ல முற்பட்டதாக கூறப்படுகின்றது.
ஆத்திரமுற்ற பௌத்த பிக்குகள் உட்பட பொது பல சேனா அமைந்த சேர்ந்தவர்கள் புனானைக்கும் வெலிக்கந்தைக்குமிடையிலான ரயில் பாதையில் அமர்ந்து கொண்டனர் . இதனால் மட்டக்களப்புக்கும் கொழும்புக்குமிடையிலான ரயில் சேவைகள் நண்பகலுக்கு பின்னர் தடைப்பட்டுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு புறப்பட வேண்டிய மாலை மற்றும் இரவு நேர ரயில்களை நிறுத்தி வைக்குமாறு ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிகாரியொருவர் குறிப்பிடுகின்றார்
இதனையடுத்து அந்த இடத்தில் சில மணிநேரங்கள் பதட்டமான நிலை காணப்பட்டதாவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொது பல சேனாவின் வருகைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை பற்றி அறிந்த மட்டக்களப்பு நகர் மங்களராமய விகாரையின் தலைமை குருவான அம்பிட்டிய சுமனரத்ன விகாரையிலிருந்து வெளியேறி சில பௌத்தர்களுடன் வந்து போலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பொது பல சேனாவை சேர்ந்தவர்கள் மங்களராமய விகாரையில் இன்று மாலை நடைபெறவிருந்த சமய நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே மட்டக்களப்பு நோக்கி வந்ததாக அவர் கூறுகின்றார்
விகாரையிலிருந்து சில பௌத்த பிக்குமார்கள், மற்றும் சில சிங்கள மக்கள் சகிதம் நகர வீதிகளில் பேரணியாக சென்ற அவரை போலிஸார் தடுத்து நிறுத்தினர்.
அவ்வேளை வீதிகளில் காணப்பட்ட பொதுமக்கள் பௌத்த பிக்குவிற்கு எதிராக கூக்குரல் ஏழுப்பிய போது அந்த இடத்தில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டது.
அந்த இடத்தில் உள்ளுர் மக்களும் காணப்படுகின்ற நிலையில் மாலை வரை ஒருவித பதட்ட நிலை தொடர்வதால் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் தற்போது அங்கு விரைந்துள்ளனர்.
ஏற்கனவே கலகத் தடுப்பு போலிஸாரின் உதவியும் நாடப்பட்டிருந்த நிலையில் தற்போது சிறப்பு அதிரடிப் படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். BBC
முன்னால் ஜனாதிபதி பிரேமதாஸ போன்ற ஒரு ஆட்சியாளர்தான் இன்றைய தேவை...
ReplyDelete