சமூக வலைதளங்களும். முஸ்லிம் இளைஞர்களும்
-H. பீர் முஹம்மது-
உலகம் முழுக்க சமூக வலைதளங்கள் தன் வலையை வலுவாகப் பின்னிக்கொண்டு வருகின்றன. நவீன உலகில் இணையம் பயன்படுத்துவோரின் ஆறாவது மற்றும் ஏழாவது விரலாக, சமூக வலைதளங்கள் மாறிவிட்டன.
பரஸ்பர கருத்துக்கள் மற்றும் உணர்வுகளைப் பரிமாறிக்கொள்ளும் வழி திறப்பாக நவீன உலகில் பரிணமித்திருக்கும் சமூக வலைதளங்களை, முஸ்லிம் இளைஞர்கள் எவ்வாறு பயன்படுத்தினார்கள்? பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்? இதன் பின்னால் நிகழும் உளவியல், சமூகவியல், அரசியல் பின்னணியை ஆராய வேண்டியுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ், மாஷா அல்லாஹ், ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர், அஸ்ஸலாமு அலைக்கும், நவூதுபில்லாஹ், தவக்கல்து அலல்லாஹ்,.... இப்படியான வார்த்தைகள்தான் காலையில் பேஸ்புக்கைத் திறக்கும்போது அதிகமும் நம்மால் காணமுடிகிறது. ஏதேனும் பள்ளிவாசல் படத்தையோ அல்லது மக்கா-மதீனா படத்தையோ போட்டால் போதும்; விழாமல் எழுந்து நின்று கம்ப்யூட்டரின் மவுசை சொடுக்குகிறார்கள், நம் இளைஞர்கள்! குறைந்தது ஆயிரம் லைக்குகள் விழுகின்றன. இதைப்பார்த்து பரவசப்படும் பதிவேற்றியவர், மேலும் மேலும் படங்களை இணையத்திலிருந்து நகல் எடுத்து அப்படியே ஒட்டித் தள்ளுகிறார்கள்.
சமூக வலைதளம் என்பது என்ன? அதன் வீச்சு என்ன? தான் சார்ந்திருக்கிற சமயத்தை அல்லது நம்பிக்கையை நேரடியாகவோ, மூர்க்கதனமாகவோ பிரதிபலிப்பதால் சமூகங்களுக்கிடையே அது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையே நினைத்துப் பார்க்காமல் இளைஞர்கள் தவறி விடுகிறார்கள். அப்பாவி இளைஞர்களின் மூளையிலும், அரசியல் விளையாடுகிறது என்பது தவிர்ர்க்க முடியாத உண்மை. ஏற்கனவே உணர்ச்சிபூர்வமாக கட்டமைக்கப்பட்டிருக்கும் மூளையில் இது மேலும் நீர்மமாக உட்புகுந்துகொள்கிறது.
சமூக வலைதளங்கள் உருவாகிய காலகட்டத்தில் அரபுநாடுகளில் பணிபுரியும் பல இஸ்லாமிய இளைஞர்கள் தங்களின் பொழுதுபோக்கிற்காக அதனைப் பயன்படுத்தினர். இன்றும்கூட பெரும்பாலானோர் அதற்காகத்தான் பயன்படுத்துகின்றனர். கையில் ஒரு லேப்டாப்பை வைத்துக்கொண்டு பணிமுடிந்து வரும் மாலை வேளையில் தங்கள் அறையில் ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு மேய ஆரம்பித்தனர். நீண்டகால ஆரம்பத்தின் தொடக்கம் இங்குதான் உருவானது. பிற்பாடு அலைபேசியிலும் இது பரவ ஆரம்பித்தது.
சமூக வலைதளங்களில் முஸ்லிம் இளைஞர்களின் செயல்பாடுகளை மூன்றுவிதமாக வகைப்படுத்தலாம்:
1. பேஸ்புக் என்பது பள்ளிவாசல் போன்று புனிதமானது என்று கருதி, அதில் தொழ நினைப்பவர்கள்; தஸ்பீஹ் எண்ணுபவர்கள்; திக்ரு உச்சரிப்பவர்கள் (ஸுப்ஹானல்லாஹ், மாஷா அல்லாஹ் போன்றவை).
2. இஸ்லாம் எங்களால் மட்டுமே இந்த பூமியில் நிலைபெறும் என்று கருதி தாவா செய்பவர்கள்; அம்மாதிரியான பதிவிடுபவர்கள். இதில் அவ்வப்போது வரம்பு மீறுபவர்களும் இருக்கிறார்கள். இதனை அவர்கள் பாணியில் நியாயப்படுத்தும் பல வசனங்கள் மற்றும் ஹதீஸ்களை அள்ளிவிடுகிறார்கள்.
ஒருவர், இஸ்லாம் குறித்து ஏதாவது ஆதரவாகவோ அல்லது எதிராகவோ பதிவேற்றும்போது ஆதரவாக எழுதினால் அவரை உச்சிமோந்து புகழ்ந்து தள்ளுவது, இதனோடு அவருக்கும் சேர்த்து தாவா செய்வது, மற்ற மதங்களை இகழ்வது போன்றவற்றைச் செய்வது, அதே நேரத்தில் எதிராக எழுதினால் அல்லது மாற்றுக்கருத்து பதிவிட்டால் உடனே எவ்வித வரம்புமின்றி, குறைந்தபட்ச வார்த்தை நாகரீகம் கூட இல்லாமல் அவர்களை மிகவும் கேவலமாகத் திட்டுவது; வசைபாடுவது; இதனை 'கருத்து ஜிஹாத்' என்று தன்னைத்தானே புகழ்ந்துகொள்வது போன்றவை நடந்து கொண்டிருக்கின்றன.
மேலும், நம்மவர்கள் பலருக்கு விமர்சனத்திற்கும், திட்டுவதற்குமான வித்தியாசம் தெரியவில்லை. இஸ்லாம் பற்றிய கருத்திற்காக மற்றவர்களை படுகேவலாமாகத் திட்டியே சுகங்காணும் பலர் இருக்கின்றனர்.
facebook மற்றும் twitter போன்ற சமூக வலைதளங்களில் பெரும்பாலும் படித்த முஸ்லிம் இளைஞர்கள்தான் தீவிரமாக இயங்கிவருகிறார்கள். அரபு நாடுகளில் கையடக்க கருவியோடு ஓய்வு நேரத்தில் அல்லது வேலை நேரத்தில் பேஸ்புக்கில் தங்கள் பொழுதை ஓட்டுவது எப்படி தீவிர சமூக விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.
இதன் பின்னரசியலைத் தீவிரமாக ஆராயும்போது சில உலமாக்களின் உப்புச்சப்பற்ற, சமூக அக்கறை சாராத, உள்ளடக்கமற்ற பேச்சுக்களும் இதற்கு ஒரு காரணமாக இருக்கின்றன.
சமூகத்தோடு அவர்கள் நடத்தும் முக்கிய உரையாடல் களமான வெள்ளிக்கிழமை உரைகளில் பெரும்பாலும் சடங்கார்த்தமான பேச்சுக்களே வெளிப்படுகின்றன. பெரும்பாலும் எவ்வித லெளகீக விஷயங்களோ, சமூக, அரசியல், பொருளாதாரம் சார்ந்த பார்வைகளோ அதில் வெளிப்படுவதில்லை. (சிலர் விதிவிளக்காக இருக்கலாம்). இது சாதாரண இளைஞர்களின் மூளையை வெற்றிடமாக்கி, இஸ்லாம் பற்றிய வெறுமனே ஓர் இயந்திரத்தனமான புரிதலுக்கு அவர்களின் மூலையைத் தயார்படுத்துகிறது. இதுதான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள முதல் வகையான பிரிவினர் உருவாக காரணமுமாகும்.
சமூக வலைதளத்தில் ஈடுபடும் பல இளைஞர்களுக்கு சரியான மார்க்க அறிவு இருப்பதில்லை. எங்கிருந்தோ கேட்ட தலைவர்களின் உரை, யாரோ ஒருவர் பதிவிட்டதின் நகல் போன்றவற்றை தங்கள் தகவல் சுவரில் (wall) ஒட்டிக்கொள்வதன்மூலம் தான் மிகப்பெரும் இஸ்லாமிய அறிஞர் என்ற போலியான பிம்பத்தை கட்டமைக்க பலர் முயலுகின்றனர். அவர்களைப் பிந்தொடர ஓர் அப்பாவிக்கூட்டம். இப்படியாக பலவிதத்தில் தமிழ்நாட்டு முஸ்லிம் இளைஞர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
எவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தாலும் அவர்களின் சுவரில் (wall) போய் மிகவும் கேவலமாக, ஆபாசமாக நடந்து கொள்வது, கொன்றுவிடுவேன் என்று மிரட்டுவது போன்ற செயலகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இதன் விபரீதம் குறித்தோ, பன்மய சமூக அமைப்பில் அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தோ எவ்வித புரிதலோ, சிந்தனையோ இல்லாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது, தமிழ் முஸ்லிம் இளைய சமூகம். இது நூல்கண்டின் பிந்தொடரலாக தொடர்ந்து கொண்டிருப்பதுதான் பெரும் வேதனை.
யாராவது ஒருவர் இஸ்லாத்துக்கு வரும்பொழுது சம்பந்தப்பட்டவருக்கு இருக்கும் மகிழ்ச்சியைவிட, இவர்கள்தான் அதிகம் மகிழ்கிறார்கள், துள்ளிக்குதிக்கிறார்கள். அவர்களின் புகைப்படத்தைப்போட்டு அவர் முன்பு இருந்த மதத்தை திட்டுவதை பலர் தங்களின் தொடர்ந்த செயல்பாடாக செய்துவருகின்றனர். அது மற்றவர்களின் கோபத்திற்கு ஆளாகிறது.
சமூக வலைத்தளத்தின் நோக்கம் என்பது பரஸ்பர ஆக்கபூர்வமான கருத்து பரிமாற்றமே. சில நேரங்களில் அது ஆட்சியாளர்களை எதிர்த்து புரட்சி செய்யக்கூட பயன்படுகிறது. எகிப்து மற்றும் லிபியா புரட்சிக்கு பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களே மிக முக்கிய காரணமாக இருந்தன.
ஆக, சமூக வலைதளங்களில் முஸ்லிம் இளைஞர்கள் தங்கள் போக்கை, செயல்பாட்டை மாற்றிக்கொண்டு, சமுக்க ஆகறை சார்ந்த, ஆக்கப்பூர்வமான விஷயங்களைப் பதிவிடுவது அவர்களுக்கும் நல்லது; சமூகத்துக்கும் நல்லது; எதிர்காலத் தலைமுறைக்கும் நல்லது.
முள்ளை முள்ளால் தான் எடுக்கலாம் என்றும் ஒன்று உள்ளது.
ReplyDelete