வீடுகளை பெறுவதில் யாழ் முஸ்லிம்கள் சிரமம், உதவுமாறு கோரிக்கை
பொருத்து வீடுகளை முதற்கட்டமாக எவ்வாறு பெற்றுக்கொள்வது தொடர்பாக யாழ் முஸ்லீம் மக்கள் சிரமங்களை எதிர் கொள்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக அவர்களை தெளிவுபடுத்தி விண்ணப்பிப்பதற்கான எந்தவித நடவடிக்கைகளும் இது வரை மேற்கொள்ளப்படவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.
தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
முதற்கட்டமாக தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளைப் பயனாளிகளுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக விண்ணப்பிக்குமாறு புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சு பாதிக்கப்பட்ட மக்களைக் கேட்டுக்கொண்டுள்ள நிலையில் யாழ் முஸ்லீம் மக்கள் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.
அத்துடன் உரிய விண்ணப்பங்களை எவ்வாறு பெறுவது தொடர்பாக கிராம சேவகர் மட்டத்தில் எதிர்மறையான கருத்துக்கள் நிலவுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆனால் அவ்வமைச்சு இவ்வீட்டிற்கான விண்ணப்பப் படிவங்களைத் தத்தமது பிரதேச செயலாளர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் எதிர்வரும் ஜனவரி - 15 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறும் பயனாளிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.
விண்ணப்பங்கள் தமது கிராமசேவகர் மற்றும் பிரதேச செயலாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட பின் பிரதேச செயலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ அனுப்பி அதற்கான பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சு அறிவறுத்திய றிலையில் கிராம சேவகர்களோ மக்களை குழப்புகின்றனர்.
மேலும் பயனாளிகள் விண்ணப்பத்தின் ஒரு பிரதியை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அலுவல்கள் அமைச்சுக்கு அனுப்புமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேற்படி வீடுகள் இரண்டு அறைகள் சமையலறை கழிவறை மற்றும் மேலதிகமாக இரு அறைகளுடன் 550 சதுர அடி பரப்பளவைக்கொண்டதாக அமைந்துள்ளளன.
சூரிய சக்தி மின்சாரம் குழாய்க்கிணறு உட்பட சமையல் அடுப்பு சமையலறை அலுமாரிகளும் வழங்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே தான் இவ்வீட்டுத்திட்டம் தொடர்பில் தெளிவான கருத்துக்களை வழங்கி குறித்த வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க உதவுமாறு யாழ் முஸ்லீம்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுள்ளனர்.
Post a Comment