Header Ads



நீதி அமைச்சரின், செயற்பாடு நீதியானதா..?

நாட்டின் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ கடும்போக்கு பௌத்த அமைப்புக்களின் தலைவர்களுடன் மட்டக்களப்புக்குச் சென்று மட்டக்களப்பில் கடந்த சில காலமாக சர்ச்சையை ஏற்படுத்தி வரும் மங்களராம விஹாரை அதிபதி அம்பிடிய சுமனரத்ன தேரருடன் பேச்சுவார்த்தை நடத்திய நிகழ்வு தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வருடங்களாக இஸ்லாத்தையும் அல் - குர்ஆனையும் முஸ்லிம்களையும் மிக மோசமாக விமர்சித்து வரும் பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் சிங்கள ராவய, சிங்கலே அமைப்புக்களின் முக்கியஸ்தர்களுடனே நீதி அமைச்சர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

பொதுபலசேனா மற்றும் சிங்கள ராவய,  சிங்கலே போன்ற அமைப்புகள் கடந்த சில காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன.

நீதி அமைச்சர் இவர்களை அழைத்துச் சென்றதன் மூலம் இவர்களது செயற்பாடுகளுக்கு அங்கீகாரமளித்துள்ளார் என்றே உணரக் கூடியதாகவுள்ளது.

பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் அண்மைக்காலச் செயற்பாடுகள் குறித்து குறிப்பாக அல்லாஹ்வையும் அல் - குர்ஆனையும் விமர்சித்தது குறித்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 21 முஸ்லிம் உறுப்பினர்களும் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு முறைப்பாடு செதுள்ள நிலையில் அது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காது அவரை அழைத்துக் கொண்டு நீதி அமைச்சர் மட்டக்களப்பிற்குச் சென்றிருப்பதனை அரசு எப்படி நியாயப்படுத்தப் போகின்றது? 

மட்டக்களப்பிற்கு பலவந்தமாகச் செல்ல முற்பட்ட போது நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவை கிழித்தெறிந்த ஞானசார தேரரை அது குறித்து குறைந்த பட்சம் மன்னிப்பினையாவது கேட்காது ஞானசார தேரரை அழைத்துச் சென்றதானது நல்லாட்சி அரசு மீது மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியள்ளதாக சிறுபான்மை மக்கள் தெரிவிக்கின்றனர்.

முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வெறுப்புப் பிரசாரம் மற்றும் இனவாத நடவடிக்கைகள் காரணமாகவே மஹிந்த ராஜபக்ஷ அரசினைத் தோற்கடித்து நல்லாட்சி அரசினைப் பதவிக்கு கொண்டு வருவதற்கு முஸ்லிம்கள் 97 சதவீதத்துக்கும் மேலானோர் இந்த அரசுக்கு வாக்களித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும்  சிறுபான்மை பௌத்தர்களுக்குப் பிரச்சினைகள் இருப்பின் அவற்றுக்குத் தீர்வு பெற்றுக் கொடுப்பதனை சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்க்கவில்லை. ஆனால் கடும்போக்கு செயற்பாட்டாளர்களுக்கு அரசின் நீதி அமைச்சர் அங்கீகாரம் அளிப்பதன் மூலம் அவர்கள் இதுவரை காலமும் தெரிவித்து வரும் பொயான குற்றச்சாட்டுகளுக்கு அங்கீகாரமளித்திருப்பது போன்றே இருக்கும்.

கடந்த ஞாயிறன்று இரகசியப் பொலிஸாருக்கு வாக்குமூலமளித்தபின் அல் - குர்ஆனுக்கும் அல்லாஹ்வுக்கும் எதிராக நாட்டின் சகல பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடு செயுமாறு ஞானசார தேரர் பௌத்த மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டில் சட்டமும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும். சட்டத்தை மீறுவோர் யாராயினும் அவர்களுக்கெதிரான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை உயர்வாக மதித்தே சிறுபான்மை மக்கள் இந்த அரசுக்கு வாக்களித்தார்கள். இன்று இந்த அரசிலும் கடந்த அரசில் போன்று சட்டமும் நீதியும் மதிக்கப்படாத நிலை உருவாகி வருவதாகவே மக்கள் நம்பத் தொடங்கியுள்ளனர்.

(நவமணி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்)

2 comments:

  1. You should look at this picture with your own imagination.
    Imagine Wijedasa in yellow robe and the monks in "white
    national dress." Meaning , Wijedasa behaving like BBS and
    the BBS like politicos ! In another way round , all are
    politicos or all are monks ! Srilanka is seriously poised
    to fishing in troubled water . Nothing else !

    ReplyDelete

Powered by Blogger.