மியான்மரில் முஸ்லிம்கள் கொன்று குவிப்பு - மலேசியாவில் கண்டனப் பேரணி
மியான்மர் நாட்டில் ஜுன்டாக்கள் தலைமையிலான ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8–ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
மியான்மரின் வடக்கே உள்ள ரக்கினே பகுதியில் ரோஹிங்யா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு படையினருடன் மிக கடுமையான மோதல்களில் ஈடுபட்டுவரும் இவர்களை ஒடுக்கும் வகையில் ரக்கினே பகுதியை சுற்றிவளைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அவ்வகையில் ராணுவத்தினருக்கும் ரோஹிங்யா இனப்போராளிகளுக்கும் இடையில் நடைபெற்ற மோதல்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரோஹிங்யா இனத்தை சேர்ந்த மக்கள்மீது மனித உரிமைகளை மீறியவகையில் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருவதாகவும், இந்த கொடூரத்தை வெளியுலகுக்கு தெரியாமல் மறைப்பதற்காக பத்திரிகையாளர்களை அரசு தடுத்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களின் மூலம் தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில், மியான்மரில் முஸ்லிம்களை கொன்று குவிக்கும் ராணுவத்தின் நடவடிக்கையை ‘இன அழிப்பு’ நடவடிக்கை என்றும் மனித உரிமை மீறல் என்றும் மலேசியா பிரதமர் நஜிப் ரசாக் குற்றம்சாட்டி வருகிறார்.
தங்களது உள்நாட்டு விவகாரத்தில் மலேசியா பிரதமர் தலையிடுவதற்கு மியான்மர் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுவதை கண்டித்து கோலாலம்பூரில் இன்று கண்டனப் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் மலேசியா பிரதமர் நஜிப் ரசாக் கலந்துகொண்டார்.
அப்போது, அங்கு திரண்டிருந்த மக்களிடையே பேசிய நஜிப் ரசாக், நாம் பலநாடுகளை ஒன்றடக்கிய சமூகமாக உள்ளதால் ஆசியான் நாடுகளின் சட்டதிட்டங்களை மியான்மர் அரசு பின்பற்ற வேண்டும். ரோஹிங்யா மக்களை பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மியான்மரில் நடைபெற்றுவரும் இன அழைப்பை எதிர்க்கும் தனது போராட்டத்துக்கு இந்தோனேசிய அதிபர் துணைநிற்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இதை தட்டிக் கேட்பதற்காக தன்னை விமர்சித்துவரும் மியான்மர் அரசைப் பற்றி கவலை இல்லை என்று தெரிவித்த அவர், 3 கோடி மக்களை கொண்ட மலேசியா நாட்டின் தலைவர் என்ற முறையில் மியான்மரில் நடைபெறும் இன அழிப்பை பற்றி கவலைப்படாமல், கண்களை மூடிக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது.
இன்றைய கண்டன பேரணியில் பான் மலேசிய இஸ்லாமிய கட்சியின் தலைவர் அப்துல் ஹாதி அவாங் மற்றும் இதர இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள், தொண்டர்கள் ஏராளமாக பங்கேற்றனர்.
எங்களுக்குள் (கட்சி தலைவர்கள்) சித்தாந்த ரீதியான வேறுபாடுகள் இருந்தாலும், இஸ்லாமை பாதுகாக்கவும், ஷரியத்தின் புனிதத்தை பாதுகாக்கவும் நாங்கள் ஒன்றாக கூடியுள்ளோம் என நஜிப் ரசாக் குறிப்பிட்டபோது கூடியிருந்த உற்சாகமாக கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
பின்னர், அனைவரும் திரளாக எழுந்துநின்று ரகினே பகுதியில் வாழும் ரோஹிங்யா மக்களை பாதுகாப்போம் என்று நஜிப் ரசாக் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
Masha Allah
ReplyDelete