முஸ்லிம்களுக்கெதிராக பல்வேறு அநீதிகள்
முஸ்லிம் மக்களுக்கெதிராக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் அநீதிகளுக்கு ஆட்சி மாற்றத்தினூடாக மாத்திரம் தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து காத்தான்குடி மஸ்ஜிதுல் இஹ்சான் பள்ளிவாசலுக்கு ஒலிபெருக்கி சாதனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு மஸ்ஜிதுல் இஹ்சான் பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் காத்தான்குடியின் முன்னாள் நகர முதல்வர் மர்சூக் அஹமட் லெப்பை, மஸ்ஜிதுல் இஹ்சான் பள்ளிவாசல் நிருவாக சபை உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார், அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கையில் மாத்திரமன்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் முஸ்லிம்களுக்கெதிராக பல்வேறு அநீதிகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. எமது நாட்டைப் பொறுத்தவரை கடந்த 30 வருடகால யுத்தத்தின் போது அதிகமான இழப்புகளை எமது முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டது.
இந்நாட்டின் ஆட்சி என்பது தொடர்ச்சியாக பெரும்பான்மை சமூகத்தினை திருப்திப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது. ஆகவே ஆட்சி மாற்றத்தின் மூலம் மாத்திரம் எமது சமூகத்திற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முடியாது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் இறைவனிடம் அதிகமான பிராத்தனைகளை மேற்கொள்வதே எமக்கிருக்கும் மிகப்பெரிய ஆயுதமாகும் என தெரிவித்தார்.
சமூகத்தினுடைய வழிகாட்டிகளாக இருக்கின்ற உலமாக்கள் சமூகத்தில் நடைபெறுகின்ற அநியாயங்களை அக்கிரமங்களை சுட்டிக்காட்ட வேண்டியவர்களாக இருக்க வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார்.
இமாம்கள் மிம்பர்களிலே நின்று சமூகத்தின் நலன்கருதி எவ்விடயத்தினையும் பேசும்போது அதனை எதிர்த்து நின்று கேள்வி கேட்கக் கூடியவர்களாகவோ அல்லது அங்கு சொல்லப்படுகின்ற விடயங்களை அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ அமர்ந்திருப்பவர்கள் செவிமடுத்து தான் ஆக வேண்டும் அவ்வாறானதொரு சக்தியை அல்லாஹ் இந்த இமாம்களுக்கு வழங்கியுள்ளான்.
இமாம்கள் உரை நிகழ்த்தும் மிம்பர்களுக்கு இருக்கும் கௌரவமும், மதிப்பும் வேறு எந்தவொறு மேடைகளுக்கும் இல்லை. அது அரசியல் மேடையாக இருந்தாலும் கூட அவ்வாறு உருவாக்கப்பட்டு இருப்பவர்கள் தான் இந்த உலமாக்கள்.
எங்களுக்கு கிடைத்திருக்கின்ற அரசியல் அதிகாரங்களை வைத்து எமது சமூகத்திற்கு சிறந்ததொரு சேவையினை வழங்கி விட்டு செல்ல வேண்டும் என்பதே என்னுடைய எண்ணமாகும்.
இக்கல்லூரியில் மார்க்கக் கல்வியுடன் இணைந்ததாக கணிதம் மற்றும் ஆங்கிலம் போன்ற பாடங்கள் கற்பிக்கப்படுவதாக அறிந்தேன். அத்தோடு இம்முறை இக்கல்லூரியிலிருந்து 5 உலமாக்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர் என்ற செய்தியையும் அறிந்தேன்.
இப்பிரதேசத்தில் நான் இவ்வாறாக கேள்விப்படும் கல்லூரி இருக்குமாக இருந்தால் இதுதான் முதலாவது கல்லூரியாகும்.
ஆரம்ப காலத்தில் உலமாக்கள் தங்களுக்கென்று ஒரு தொழிலை பெற்றுக் கொள்வதற்காக பல சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். ஆனால் இன்று இந்த நிலைமை மாறி அவர்களும் ஒரு அரச தொழிலை பெற்றுக் கொள்வதற்கான நிலைமை உள்ளது.
இப்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் நாங்கள் பொறுமையினை கடைப்பிடிக்க வேண்டும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தாலும் மற்றைய மாகாணங்களில் பெரும்பான்மை சமூகத்துடன் முஸ்லிம்கள் இணைந்ததாகவே வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் ஏனைய பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களின் நிலைமையினை கருத்திற்கொண்டு நாங்கள் ஒற்றுமையாக வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment