அம்பாந்தோட்டையில் ஒருவாரம் தரித்துநின்ற, அமெரிக்காவின் இராட்சத கண்காணிப்பு விமானம்
அமெரிக்க கடற்படையின் பத்தாவது ரோந்து அணியின், P-8A Poseidon என்ற இராட்சத கடல்சார் கண்காணிப்பு விமானம், ஒரு வாரகாலமாக சிறிலங்காவின் அம்பாந்தோட்டையில் தரித்து நின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த டிசெம்பர் 4ஆம் நாள் மத்தல விமான நிலையத்தை வந்தடைந்த இந்த விமானம், கடந்த 11ஆம் நாள் புறப்பட்டுச் சென்றது.
அமெரிக்க கடற்படையின் பொசிடோன் விமானத்தில் வந்த கடற்படை நிபுணர்கள் சிறிலங்கா இராணுவத்தினருக்கு, இந்த விமானத்தின் ஆற்றல்கள் குறித்து விளக்கமளித்தனர். அத்துடன் நிபுணத்துவ ஆலோசனைகளையும் பரிமாறிக் கொண்டனர்.
அத்துடன் சிறிலங்கா விமானப்படை மற்றும் கடற்படையுடன் இணைந்து, பூகோள வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த அனைத்துலக கப்பல் பாதைக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்தும் அமெரிக்க கடற்படை விமானம் பயிற்சியில் ஈடுபட்டது.
ரெட் லான்சர்ஸ் என்ற செல்லப்பெயருடன் அழைக்கப்படும், பத்தாவது ரோந்து அணி, அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஜக்சன்வில் தளத்தில் இருந்து செயற்படுகிறது.
தற்போது, இந்தோ- ஆசிய – பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும், முக்கியமான கடல்பாதைகள் மற்றும் வணிகப் பாதைகளைப் பாதுகாப்பதிலும், இந்த விமானம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
P-8A பொசிடோன் ஒரு பலநோக்குப் பயண விமானமாகும். இது நீண்டதூர கடல்சார் கண்காணிப்பு ஆற்றலைக் கொண்டது. உலகிலுள்ள மிக முன்னேற்றகரமான சமுத்திர கண்காணிப்பு விமானம் இதுவாகும்.
சிறிலங்கா அரசாங்க மற்றும் ஆயுதப்படைகளில் உள்ள எமது நண்பர்களுடன் கூட்டாக இணைந்து செயற்படும் வாய்ப்புக் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று, இந்த விமானத்திலுள்ள படைப்பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி லெப். அந்தோனி பெரெஸ் தெரிவித்துள்ளார்.
கடல்சார் பாதுகாப்பு ரோந்து, தேடுதல், மீட்பு, போதைப்பொருள் முறியடிப்பு, மனிதாபிமான மற்றும் அனர்த்த மீட்பு முயற்சிகள், போன்றவற்றில் முன்னேற்றகரமான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த பொசிடோன் விமானம்.
இந்தப் பயணத்தின் போது சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து செயற்பட்டதை மதிக்கிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறிலங்கா பாதுகாப்புப் படைகளுடனான இந்த இருதரப்பு கூட்டானது, எல்லோருக்கும் செழிப்பை ஏற்படுத்தக் கூடிய பூகோள கடல்சார் சட்டங்களை வலுப்படுத்துவதாக உள்ளது என்று அமெரிக்க தூதரக அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி ரொபேர்ட் ஹில்டன் தெரிவித்துள்ளார்.
Post a Comment