தங்கம் மீது, பாய்ந்த மோடி
ரூபாய் நோட்டுகளைச் செல்லாமல் ஆக்கிய அதிரடியைத் தொடர்ந்து கறுப்புப் பணத்தை ஒழிக்க அடுத்த அதிரடியைத் தங்கம் மீது எடுத்திருக்கிறது மோடி தலைமையிலான அரசு.
தங்கத்தின் மீது மோகம் கொண்ட நாடுகளில் உலகிலேயே முதலிடத்தில் இந்தியாதான் உள்ளது. இந்தியாவில் தற்போது கிட்டத்தட்ட 18 ஆயிரம் டன் தங்கம் புழக்கத்தில் உள்ளது. தங்கத்தைப் பெரும்பாலானோர் முதலீடாகக் கருதுகிறார்கள். ஆனால் தங்கத்தினால் பொருளாதார வளர்ச்சிக்கு எந்தப் பயனும் இல்லை என்பதுதான் உண்மை. எனவே பல வழிகளிலும் தங்கத்தின் புழக்கத்தைக் குறைக்க அரசு முயற்சித்து வந்தது.
இதற்கிடையில், பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் 8-ம் தேதி அறிவித்து, கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இந்த அறிவிப்பால் கறுப்புப் பண முதலைகளைக் காட்டிலும் சாமான்ய மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் கறுப்புப் பணத்தை ஏற்கெனவே ரியல் எஸ்டேட்டிலும், தங்கத்திலும் பதுக்கி விட்டார்கள் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அரசும் இது ஒரு தொடக்கம்தான், கறுப்புப் பணத்தை வெளியே கொண்டுவர அடுத்தடுத்து திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று கூறியிருந்தது.
இந்த நிலையில் தங்கம் வைத்திருப்பதில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதாவது திருமணமான ஒருபெண் 500 கிராம் வரையிலும், திருமணமாகாத பெண் 250 கிராம் வரையிலும் தங்க நகைகளை வைத்திருக்கலாம் என்று அறிவித்துள்ளது. ஒரு ஆண் அதிகபட்சமாக 100 கிராம் வரை தங்கம் வைத்திருந்தால் அவர்களுக்கு வரி எதுவும் கிடையாது. அதற்குமேல் வைத்திருந்தால் வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி உண்மையா பொய்யா என்பது குறித்து ஆராயாமல் ஊடகங்கள் செய்தியை வெளியிட்டன. இந்தச் செய்தி வெளியானதிலிருந்து மக்கள் பதற்றமடையத் தொடங்கினர். எனவே நிதி அமைச்சகம் முன்வந்து இந்தச் செய்தி குறித்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சகம் தெரிவித்தபடி, இது ஒன்றும் புதிதாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அல்ல. ஏற்கெனவே இருக்கும் நடைமுறைதான். வருமானத்திற்கு அதிகமாக நகைகள் வைத்திருந்தால் வழக்கம் போல வரிவிதிக்கப்படும். வருமான வரிச் சோதனையின்போது இந்த வரம்புக்கு அதிகமாக தங்கம் பிடிபட்டால் அதற்கு 60% வரி விதிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.
மேலும் முன்னோர்களிடமிருந்து பெற்ற பரம்பரை நகைகள் மீதும், கணக்கில் காட்டிய மற்றும் விவசாய வருமானத்தில் வாங்கிய நகைகள் மீதும் வரி விதிக்கப்படாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆனால் இந்தச் சட்டம் இருந்தாலும் நடைமுறையில் இது கடைபிடிக்கப்படவும் இல்லை. இதுவரை தங்கம் மீதான சோதனைகளையும் வருவாய்த் துறையினர் பெரிய அளவில் செய்யவில்லை. ஆனால் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையைத் தொடங்கி விட்ட மத்திய அரசு, இதனை இனி தீவிரமாகச் செயல்படுத்த இருக்கிறது.
ஆனால் இதிலும் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. ஒரே நாளில் 100 பவுன் தங்கம் வாங்குபவர்களும், இருபது முப்பது ஆண்டுகள் சிறுகச் சிறுக சேர்த்து வாங்கி வைத்துள்ள 100 பவுன் தங்கமும் ஒன்றா என்பதுதான் இங்குப் பிரச்னை. அதை எப்படி அரசு முடிவு செய்யப் போகிறதோ?
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவித்ததில் ஏற்பட்டுள்ள நடைமுறைச் சிக்கல்களே இன்னும் தீராமல் இருக்கும் நேரத்தில், தங்கத்தின் மீதான வரி நடவடிக்கையும் பல்வேறு நடைமுறை சிக்கல்களைக் கிளப்பப் போகிறது என்பதே உண்மை.
Post a Comment