'ஜனாதிபதியாக கோத்தாபாயவை வர விடமாட்டோம்'
-ரொபட் அன்டனி-
மாகாண சபைகளை கலைக்கின்ற அதிகாரத்தை புதிய அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்க மாட்டோம். மேலும் ஒத்திசைவு பட்டியலை நீக்குவதுடன் கலைக்கும் அதிகாரத்தையும் திருத்துவோம். இந்தியாவைப் போன்று நினைத்தவுடன் ஜனாதிபதி மாநிலத்தை கலைக்கும் அதிகாரம் இருக்காது. அதனை நாங்கள் வழங்க மாட்டோம். அவற்றை மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் செய்யலாம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
வடக்கு மக்கள் தங்கள் வீரர்களை நினைவுகூரவேண்டுமானால் ஏனைய இனங்களை காயப்படுத்தாமல் செய்யலாம். பிரபாகரனை யாராவது நினைவுகூரவேண்டுமானால் பிரபாகரன் காரணமாக பாதிக்கப்பட்டு அநாதையாகியவர்கள் காயப்படாத வகையில் நினைவுகூரப்படவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
வீரகேசரி இணையதளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே டிலான் பெரேரா இந்த விடயங்களை குறிப்பிட்டார். செவ்வியின் முழு விபரம் வருமாறு
Q: 2020 இல் சுதந் திரக் கட்சியின் வேட்பாளர் யார்?
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதியும் எமது கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவே இடம்பெறவேண்டும்.
Q: ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன முடியாது என்று திடமாக கூறிவிட்டால் வேறு ஒருவரை தேட வேண்டும் என நீங்கள் கூறினீர்கள். அவ்வாறெனின் முன்னாள் பாது காப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை சு.க.வின் வேட்பாளராக கொண்டு வரும் முயற் சியுள்ளதாக கூறப்படுவது உண்மையா?
சுதந்திரக் கட்சியின் ஒருசிலர் மற்றும் விமல் வீரவன்ச, கம்பன்பில போன்றோர் கோத்தபாய ராஜபக் ஷவை அவ்வாறு கொண்டு வர முயற்சிக்கின்றனர். ஆனால் நாங்கள் அதனை கடுமையாக எதிர்க்கிறோம். சுதந்திரக் கட்சி அதனை கடுமையாக எதிர்க்கின்றது. கோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதி வேட்பாளராகினால் அவரால் ஒரு நாளும் வெற்றி பெற முடியாது என சுதந்திரக் கட்சிக்கு நன்றாக தெரியும். அவரால் தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்குகளை பெற முடியாது. தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்குகளை பெற முடியாத வேட்பாளர் தோல்வியடைவார். கோத்தபாய தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்தில் சேவையாற்ற முடியும். சிங்கள கத்தோலிக்க மக்களும் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். எனவே தமிழ், முஸ்லிம் வாக்குகளை பெற முடியும் ஒருவரையே நாம் வேட்பாளராக நியமிக்க வேண்டும். மஹிந்த ராஜபக் ஷவினாலேயே தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற முடியாதுவிடின் கோத்தபாயவினால் முடியுமா ?
Q: தற்போது புதிதாக உருவாக்கப் பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் கோத்தபாய போட்டியிட்டால்?
வடக்கு, தெற்கு ஆகிய இரண்டு பகுதிகளிலும் இனவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கில் இனவாதத்தை பரப்பியவர்களும் தெற்கில் இனவாதத்தை பரப்பியவர்களும் தோல்வியடைந்தனர். இனவாதம் மற்றும் மத வாதத்தை பரப்பும் தலைவர்களினால் வெற்றி பெற முடியாது. அதனால் இனவாதிகளுக்குப் பயந்து சில நல்ல திட்டங்களை நாங்கள் பிற்போட்டு விடக் கூடாது. ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப் போட்டி இடம்பெற்றாலும் தமிழ், முஸ்லிம் வாக்குகளை பெறும் வேட்பாளரே வெற்றி பெறுவார்.
Q: ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால் எவ்வாறு சமாளிப்பீர்கள்?
மஹிந்த ராஜபக்ஷ போன்ற ஒருவரை தோற்கடித்த மைத்திரிபால சிறிசேனவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை தோற்கடிப்பது ஒரு விடயம் அல்ல.
இவன் ஒருத்தன்...
ReplyDelete