''ஜனாதிபதியை கொலை செய்ய, மறைமுக திட்டம் தீட்டப்படுகிறது''
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கான சதித் திட்டம் தீட்டப்பட்டு வருகின்றது என ஊடக அமைச்சின் செயலாளர் நிமல் போபகே தெரிவித்தார்.
கொழும்பில் இன்று -20- இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கும் போது,
ரோஹன விஜித முனி என்ற ஜோதிடர் ஒருவர் சமூக வலைத்தளங்களின் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனவரி மாதம் 26ஆம் திகதி இறந்து விடுவதாக எச்சரிக்கை விடுத்து வருகின்றார்.
ஆனாலும் அவர் கூறுவதில் எந்த விதமான சோதிடமும் இல்லை. இவ்வாறான வதந்தியை பரப்புவதன் மூலம் ஜனாதிபதியை கொலை செய்து விடுவதற்கான ஓர் மறை முகமான திட்டமே தீட்டப்பட்டு வருகின்றது.
மக்கள் மத்தியில் சோதிட நம்பிக்கையினை வெளிப்படுத்துவது போல செயற்பட்டு, அதன் மூலம் ஜனாதிபதியை கொலை செய்வதற்கான சூழ்ச்சி செய்யப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளதோடு பின்னணியில் செயற்படுபவர்களை கண்டு பிடிக்க வேண்டும் எனவும் தெரியப்படுத்தியுள்ளோம்.
இது மக்களிடையே விமர்சனங்களை கொண்டு செல்வதற்கான செயற்பாடு அல்ல. இப்போது இருக்கும் வதந்திகளை அடிப்படையாக கொண்டு ஜனாதிபதியை கொன்று விட்டால் நாளை யாரிடம் இதனைப் பற்றி பேசுவதால் எந்த விதமான பயனும் இல்லை.
ஜனாதிபதி இது தொடர்பில் என்னுடன் ஆலாசிக்கவில்லை. ஆனாலும் அவர் கேட்கும் முன்பாக செயற்பட வேண்டும் என்பதற்காகவே பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் மூலம் இந்த விடயத்தினை அறியப்படுத்தியுள்ளேன்.
இது நினைப்பதை விடவும் மிகவும் ஆபத்தான மற்றும் பாரதூரமான விடயம். ஜனாதிபதி இறந்து விடுவதாக செய்தி பரப்புவதோடு அதனை நிறைவேற்ற திட்டமிடும் செயற்பாடு ஒன்றே இப்போது நடைபெற்று கொண்டு வருகின்றது.
மேலும் கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டது என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்க விடயமாகும்.
ஜனாதிபதிக்கு கொலை அச்சுறுத்தல் இருக்கின்றது. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிமல் போபகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment