வெறுப்புப் பேச்சும், நமது கடப்பாடும்
நாட்டில் அண்மைக் காலமாக இனவாத, மதவாத ரீதியிலான வெறுப்புப் பேச்சுக்கள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கவலைகளை வெளியிட்டு வருகின்றனர்.
குறிப்பாக கடந்த ஒரு மாத காலத்தினுள் நாட்டின் பல பகுதிகளிலும் அடுத்தடுத்து இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்களை இவற்றுக்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
மட்டக்களப்பில் சுமணரத்ன தேரர் கிராம சேவையாளருக்கு எதிராக முன்வைத்த கருத்துக்கள், கொழும்பில் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பிலான ஆர்ப்பாட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் செயலாளர் அப்துர் ராஸிக் வெளியிட்ட கருத்துக்கள், புறக்கோட்டை ரயில் நிலையம் முன்பாக டான் பிரசாத் என்பவர் வெளியிட்ட கருத்துக்கள் மற்றும் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தொடராக வெளியிட்டு வரும் கருத்துக்கள் என்பவற்றை இவற்றுக்கு பிரதான உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.
இதற்கப்பால் தினமும் ஆயிரக் கணக்கானோர் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் வெறுப்பூட்டும் கருத்துக்கள் பற்றியும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மேற்குறித்த நபர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் போது அவற்றை அடிப்படையாகக் கொண்டு இரு தரப்பினரும் முட்டி மோதிக் கொள்கின்றனர்.
இதன் காரணமாக மேலும் பல புதிய புதிய வெறுப்பூட்டும் கருத்துக்கள் முளைவிடுகின்றன. இவை சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளதுடன் மிக வேகமாக வெவ்வேறு வடிவங்களில் பகிரப்படுகின்றன. இதன் மூலம் சமூகங்கள் மத்தியில் வீண் சந்தேகங்களும் கருத்து முரண்பாடுகளும் தோற்றம் பெறுகின்றன.
இந் நிலையில்தான் இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, இவ்வாறானவர்களுக்கு எதிராக தாமதியாது சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
'' தமது குறுகிய நோக்கங்களை அடைந்து கொள்ளும் நோக்குடன் குரோத வெளிப்பாடுகள் மற்றும் செயற்பாடுகளின் மூலம் எங்களது சகோதர இலங்கைப் பிரசைகளை அவமானப்படுத்தி இழிவிற்கு உட்படுத்தி இன அல்லது மத அடிப்படையில் இலங்கை சமூகத்தினுள் பிளவை ஏற்படுத்துவதற்கான சூழலை உருவாக்குவதற்கான எவ்வித சந்தர்ப்பத்தையும் வழங்க முடியாது.
இனங்களுக் கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக இனவாத மற்றும் மதவாத அடிப்படையில் ஆத்திரமூட்டுபவர்கள் சம்பந்தமாக தாமதியாது சட்டத்தை கடுமையாக செயற்படுத்த வேண்டியுள்ளது '' என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு இனங்களுக்கிடையிலான வெறுப்புப் பேச்சு நிகழ்வுகள் ஒருபுறம் இருக்க முஸ்லிம்கள் தமக்கு மத்தியில் நிலவும் அரசியல் மற்றும் மார்க்க கொள்கை வேறுபாடுகள் காரணமாக ஒருவரை ஒருவர் விமர்சித்து சமூக வலைத்தளங்களிலும் மேடைகளிலும் வெளியிடும் கருத்துக்களும் இன்று பெரும் பிரச்சினையாகவும் வெறுப்பைக் கக்குவதாக அமைந்துள்ளமையும் கவலைக்குரியதாகும்.
சமீப காலமாக அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களும் மார்க்கப் பிரசார அமைப்புகளின் ஆதரவாளர்களும் ஒருவரையொருவர் கடுமையாக சொற்களால் தாக்கி வருகின்றனர். இதுவும் ஒரு வகையில் வெறுப்புப் பேச்சுதான் என்பதை நம்மவர்கள் மறந்து விடுகின்றனர்.
எனவேதான் பிற சமயத்தவர்கள் எம்மை நோக்கி வெறுப்பாக பேசுகின்ற போது நாம் எவ்வாறு ஆத்திரப்படுகிறோமோ அதேபோன்றுதான் நாம் மற்றொருவரை நோக்கி வெறுப்பாக பேசும்போதும் அவர்கள் ஆத்திரப்படுகிறார்கள், சங்கடப்படுகிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
எனவே வெறுப்பைத் தவிர்த்து அன்பை வெளிப்படுத்துவதே இவ்வாறான பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வாக அமையும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
Post a Comment