சிங்கள மக்கள், இனவாதிகள் அல்ல – பௌசி
சாதி ,மத பேதங்களை கருதாது அனைத்து இனத்தவர்களும் ஒன்றினைந்து செயற்படுவதன் மூலமாக எதிர்கால சந்ததியினர் எவ்வித அச்சமும் சந்தேகமுமின்றி வாழக்கூடிய சூழ்நிலை உருவாகுவதாக தேசிய ஒன்றினைப்பு மற்றும் மீள்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் எ.எச்.எம்.பௌசி தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய செயற்கை நத்தார் மரத்தை நான்காம் தடவையாக திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இக்கருத்தினை வெளியிட்டார்.
' இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் நாம் அனைவரையும் சகோதரர்களாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளார்கள். இந்நத்தார் மரம் மூலமும் அச்செய்தியே எடுத்தியம்பப்படுகின்றது. இலங்கை துறைமுக அதிகார சபையின் அல்லது அரசாங்கத்தின் எவ்வித நிதி உதவிகளுமின்றி எம்முடைய சகோதரர்கள் சேர்த்த நிதியை கொண்டு இம்மாபெரும் மரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இன்று பெரும்பாலானவர்கள் சாதி ,மத பேதங்களை தோற்றுவித்து அரசியல் இலாபங்களை ஈட்டிக்கொள்ள முயற்சிக்கின்றார்கள். இதுவோர் தவறான செயலாகும். நாம் அனைவரும் இலங்கையர்களே. எம்மிடம் அரசியல் நிலைப்பாடுகள் காணப்பட வேண்டுமென்ற போதிலும் சமய நிகழ்வுகளின் பொழுது மற்றும் தேசிய நிகழ்வுகளின் பொழுது நாம் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும். தேர்தல் காலத்தில் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இக்காலப்பகுதியில் இனத்தை முன்னிலைப்படுத்தி வாக்குகளை அதிகரித்துக்கொள்ள முயற்சிக்கின்றார்கள். கொழும்பு மாவட்டத்தில் சிங்கள பௌத்த மக்களே பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். ஆனாலும் நான் தேர்தலில் வெற்றிக் கொண்டேன். சிங்கள் பௌத்த மக்கள் ஒரு போதும் இனவாதிகளாக செயற்படமாட்டார்கள். இனவாத்தை தூண்டுவதன் மூலமாக இந்நாட்டிலுள்ள சமாதானச் சூழ்நிலையை சீர்குலைக்க முயற்சிக்கும் ஒரு சில நபர்கள் இந்நாட்டில் காணப்படுகின்றார்கள். அவ்வாறானவர்களுக்கும் நாம் இடமளிக்க கூடாது. நாம் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும். எதிர்வரும் 05 ஆண்டுகளில் மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையினை உருவாக்குவதுடன், ஸ்திரமான பொருளாதாரத்தையும் உருவாக்குவதற்கு நடவடிக்கையெடுப்போம். நாம் மக்களிடம் வேண்டுவது யாதெனில் இனம் ,மதம் பற்றி சிந்திக்காது அனைவரும் ஒன்றினைந்து ஒரு இனமாக இலங்கையர்களாக வாழ்வதற்கு உறுதிகொள்வோம். இச்சக்தி எம்மிடம் இருக்குமாயின் எம்முடைய இளம் சந்ததியினர் எவ்வித பிரச்சினைகளுமின்றி வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படுமென ...' அமைச்சர் எ.எச்.எம்.பௌசி தெரிவித்தார்.
Post a Comment