சாட்சியமளிக்க வரும்படி ஜனாதிபதி, பிரதமருக்கு நீதிமன்றம் அழைப்பு
ஐ. தே. க. முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் வழக்கில் சாட்சியமளிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட 15 பேருக்கு நீதிமன்றம் அறிவித்தல் வழங்கியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது எதிரணி பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியைத் தடுக்கும் நோக்கத்தில் போலி ஆவணமொன்றை ஊடகங்களுக்கு வெளியிட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் சாட்சியமளிக்க ஜனாதிபதி, பிரதமர் உட்பட பதினைந்து பேரை அடுத்த வருடம் மார்ச் 20 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐ. தே. க. முன்னாள் பொதுச் செயலாளரை பிணையில் செல்லவும் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
வழக்கு விசாரணைக்கு முன்னர் பிரதிவாதிக்கு கணனியிலிருந்து சாட்சியங்களைப் பெற்றுக்கொள்ள போதியளவு அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதாலே பிணை வழங்குவதை ஆட்சேபிக்கவில்லை என சட்ட மா அதிபர் தெரிவித்தார். இதை அடுத்தே திஸ்ஸ அத்தநாயக்காவை 25,000 ரூபா காசுப் பிணையிலும் ஒவ்வொன்றும் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணையிலும் விடுதலை செய்து நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன உத்தரவிட்டார்.
குறிப்பிட்ட ஆவணம் மூலம் இன, மத ரீதியில் வெறுப்பை தூண்டியதற்காக திஸ்ஸ அத்தநாயக்காவை அக்டோபர் 19 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தவிடப்பட்டது. 2007 ஆம் ஆண்டு சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின் இல. 56 பிரிவு 3 (1) ன் கீழ் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டமொன்றின் கீழ் இலங்கையின் மேல் நீதிமன்றத்தில் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டிருப்பது இதுவே முதல் தடவை ஆகும் அப்போதைய பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கும். ஐ. தே. க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று இருப்பதாக ஊடகங்களுக்கு போலி ஆவணம் ஒன்றைக் காண்பித்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின் இல. 56 பிரிவு 3 (1) இனப்பாகுபாடு, விரோதம், வன்முறை என்பவற்றைத் தூண்டுதல் தேசிய, இன மற்றும் மத ரீதியான வெறுப்புக்கு ஆதரவாக பேசுதல் அல்லது யுத்த பிரசாரத்தில் ஈடுபடல் என்பன கூடாது எனக் கூறுகின்றது.
மேலும், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 454, 459ன் பிரகாரம் திஸ்ஸ அத்தநாயக்கா தண்டனைக்குரிய குற்றம் இழைத்திருப்பதாகவும், ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் பிரிவு 80 C ன் பிரகாரம் தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளரின் குணம் அல்லது நடத்தை தொடர்பிலான போலி ஆவணம் ஒன்றைக் காண்பித்து தேர்தல் முடிவை மாற்ற முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரத்ன பண்டார, சிரேஷ்ட அரச சட்டத்தரணி லக்மினி கிசியாகம ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். (ஸ)
Post a Comment