மகிந்தவின் வெற்றிக்காக உழைத்தோம், காலை வாரி விட்டார் – பொது பலசேனா
கடந்த 2015ஆம் ஆண்டு நடத்த அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக தாங்கள் பரப்புரைகளில் ஈடுபட்டதாக பொது பலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
அதிபர் தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்கு ஐதேகவுடனும், சம்பிக்க ரணவக்கவுடனும் இணைந்து பொது பலசேனா பணியாற்றியதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.
வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை நேற்றுமுன்தினம் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
சம்பிக்க ரணவக்கவே பொது பலசேனாவை உருவாக்கினார் என்றும், தன்னிடம் இருந்து அந்நியப்படுத்துவதற்காகவே முஸ்லிம்கள் மீது பொது பலசேனா தாக்குதல் நடத்தியது என்றும் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியிருந்தார்.
இதுகுறித்து பிபிசியின் சிங்கள சேவையான சந்தேசயவுக்கு கருத்து வெளியிட்டுள்ள பொது பலசேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே,
“மகிந்த ராஜபக்சவுடன் தொடர்பு வைத்துள்ள அனைவருக்குமே, எமது அமைப்பு அவருக்கு ஆதரவளித்து வந்தது என்பது நன்றாகத் தெரியும்.
துரதிஷ்டவசமாக இப்போது அவர், தன்னைச் சுற்றியுள்ளவர்களின் ஆலோசனைப்படி வேறு விதமாக பேசுகிறார்.
மகிந்த ராஜபக்ச கூறியது போல, சம்பிக்க ரணவக்கவுடனோ, ராஜித சேனாரத்னவுடனோ பொது பலசேனா தொடர்புகளை வைத்திருக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
மஹிந்தவின் ஆலோசனையோடு சம்பிக்க எனும் இனவெறியனை கொண்டு உருவாக்கப்பட்டதே பொது பல சேனா. இன்று ஒவ்வொரு திருடனும் மாறி மாறி பழி சுமத்திகொள்வது வேடிக்கை. ஒரு ராஜாவாக செயற்பட்ட மஹிந்தவால் சில காவி மொட்டைகளை கட்டுப்படுத்த முடியவில்லை எனும் கதை சிறு பிள்ளைக்கும் சிரிப்பைஏற்படுத்தும் இன்றைய நல்லாட்சி தடம்புரண்டு செல்வதால் மஹிந்த நல்லவனாகிவிட முடியாது
ReplyDelete