அரசு கட்டுப்பாட்டிற்குள் வந்தது அலெப்போ
சிரிய அரசு படைகளின் கட்டுப்பாட்டிற்குள் அலெப்போ நகர் மீண்டும் வந்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான உள்நாட்டுப்போர், 6-வது ஆண்டாக நீடித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்த அலெப்போ நகரை முழுமையாக விடுவிப்பதற்காக ஜனாதிபதி ஆதரவு படையினர், கடந்த மாதம் மத்தியில் இருந்து அங்கு கடும் சண்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்காக, அலெப்போ நகரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதற்காக பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு சர்வதேச செஞ்சிலுவை கமிட்டி மேற்பார்வையின் கீழ் இந்த வெளியேற்றும் நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது. அலெப்போ நகரில் உள்ள பழைய நகரம் உட்பட நான்கில் மூன்று பகுதியை சிரிய இராணுவத்திடம் கிளர்ச்சியாளர்கள் இழந்த நிலையில், மீதமுள்ள பகுதிகளை மீட்பதற்கு தீவிரமான சண்டை நடைபெற்று வந்தது.
அலெப்போ நகரில் பெரும்பாலான இடங்களை இழந்த நிலையில், 5 நாள் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு கிளர்ச்சியாளர்கள் அழைப்பு விடுத்தனர். ஆனால், ரஷ்ய ஆதரவு சிரிய அரசு படைகள் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வந்தது. போர் நிறுத்தத்தை கொண்டு வர வேண்டும் என்ற ஐ.நா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கோரிக்கையை பொருட்படுத்தாமல் இந்த தாக்குதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில், சிரிய அரசு படைகளின் கட்டுப்பாட்டிற்குள் அலெப்போ நகர் மீண்டும் வந்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
Post a Comment