முஸ்லிம் எம்.பி.க்களினால், அரசாங்கத்தை கவிழ்க்கலாம்..!
முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் தொடர்பில் பேசுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுடைய அங்கீகரிக்கப்பட்ட தலைமைத்துவமாகும்.
அவர்கள் சமூகத்தின் உரிமைகளைப் பற்றி பேசாமல் அமைதியாக இருந்தால், ஐக்கிய தேசிய கட்சியினரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரும் அந்த நிலைமையினை சாதகமாகப் பயன்படுத்தி எதனையும் வழங்காமல் மௌனமாகி விடுவார்களென மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்தின் உரிமைகளுக்காக வடக்கு கிழக்கில் உரத்துப் பேசினால் தமிழ் மக்களுடைய எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியேற்படும்,
அதேபோன்று வடக்கு கிழக்கு வெளியே பேசினால் சிங்கள சமூகம் மத்தியில் அதிருப்தி ஏற்படும் என நினைத்து அந்த இரண்டு சமூகங்களையும் திருப்திப்படுத்திக் கொண்டிருந்தால் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்றும் அவர் கூறினார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைரின் நிதி ஒதுக்கீட்டில் சமூக அமைப்புகளுக்கு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு ஏறாவூர் நகர் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.பிரதேச செயலாளர் எஸ்எல்எம் ஹனிபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர், பிரதேச மற்றம் சமூக முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இராஜாங்க அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் - நாட்டில் எதிர்வரும் ஆண்டில் சட்ட ரீதியான பல மாற்றங்கள் முன்மொழியப்படவுள்ளன.
இந்த சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் முஸ்லிம்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக சமூகத்தின் நிலைப்பாட்டை தெளிவாகப் பேச வேண்டும். அவர்கள் இதுவரை வாய் திறக்காமல் இருப்பது மிகவும் கவலையான விடயம்.
குறிப்பாக எதிர்வரும் ஆண்டிலே முஸ்லிம்களுடடைய பிரதிநிதித்துவத்தை வெகுவாகக் குறைக்கும் தொகுதி வாரியான பாராளுமன்ற தேர்தல் சட்ட மூலம் கொண்டுவரப்படவுள்ளது.
இந்த விடங்கள் தொடர்பாக திருத்தங்களைக் கொண்டு வந்து தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தை முடக்க முடியுமாகவிருந்தால் அதனையும் செய்யவேண்டும்.
ஜனநாயக ரீதியாக போராட்டங்கள் நடத்தி தொகுதிவாரியான பாராளுமன்ற தேர்தல் முறை சட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கான பணிகளை முஸ்லிம் காங்கிரஸ் முன்னின்று செய்யவேண்டும்.
அதற்கு எங்களால் இயன்ற முழுப்பங்களிப்பையும் நிச்சயம் செய்வோம்;.முன்னாள் ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்தன 1978ல் கொண்டு வந்த விகிதாசார அடிப்படையிலான நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவு முறையில் நாங்கள் தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறோம்.
ஆனால் மீண்டும் தொகுதி ரீதியான உறுப்பினர் தெரிவுச் சட்டம் கொண்டுவரப்படும்போது அது இன்னும் பல ஆண்டுகள் நீடித்திருக்கும்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாராளுமன்றத்தில் உள்ள 21 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெளியேறினால் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருக்க முடியாது,
அரசாங்கம் கவிழ வேண்டிய நிலை ஏற்படும். தற்போது முஸ்லிம் சமூகத்தின் அதிகரித்த பிரதிநிதித்துவம் காரணமாகவே எங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
21 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக ஆட்சியை மாற்றியமைக்கவும் முடியும்.இந்த சட்டமூலத்தைக் தடுக்காமல் இருந்தால் நாங்கள் முஸ்லிம் சமூகத்துக்கு செய்யும் வரலாற்றுத் துரோகமாகவே அமையும்.
இந்த சட்ட மூலம் கொண்டுவரப்பட்டால் முஸ்லிம் சமூகத்தின் முகவரியைக்கூட தொலைத்து விடக்கூடிய நிலை ஏற்படும் என்றார்.
Post a Comment