Header Ads



சிறையில் பிறந்தநாள் கொண்டாடிய துமிந்த - மைத்திரி, ரணிலை சாடிய ஹிருணிக்கா

கைதிகளாக சிறைச்சாலைகளுக்கு செல்கின்றவர்கள் சொகுசு வாழ்க்கையினையே வாழ்ந்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர குற்றம் சுமத்தினார்.

இன்று பாராளுமன்றத்தில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தில் கத்திக் கொண்டு மகிழ்ச்சியான இருந்தவர்கள் சிறைச்சாலைக்கு சென்றுவிட்டால் புதிய நோய்க்கு ஆளாகி படுத்துக்கொள்கின்றார்கள்.

சிறைச்சாலைகளுக்கு செல்லும் அரசியல்வாதிகளுக்கு மட்டும் விஷேட சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

அதேபோல் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ள பாக்கிஸ்தானியர்களான அமான்சேன், சிந்திக் என்பவர்களில் ஒருவருக்கு கட்டில் தலையணை போன்றன வழங்கப்பட்டுள்ளது.

கேட்டால் அவருக்கு நோய் என்கின்றனர் அவருடைய நோய் என்னவென்று தெரியுமா உயரத்திற்கு ஏற்ற நிறை இல்லையாம் ஆனால் வெளியில் மகிழ்ச்சியாக இருந்தவரே அவர்.

அதேபோன்று சிறைச்சாலைக்கு உள்ளே கட்டில், மெத்தை, மின்சார விசிறி, விஷேட குளியலறை மற்றும் தொலைக்காட்சி உட்பட அனைத்து வசதிகளும் இருக்கின்றது.

முடிந்தால் இன்றே சென்று பார்வையிடுங்கள் நாளை முதல் அவை அகற்றப்பட்டுவிடும், அதனால் இன்றே சென்று பாருங்கள்.

மேலும் தொலைபேசி பாவனைகளுக்கும் வழிசமைத்து கொடுக்கப்படுகின்றது, இவை எப்படி பொறுப்பதிகாரிகளுக்கு தெரியாமல் நடக்க முடியும். அனால் கேள்வி எழுப்பும் போது சரியான பதில்கள் கொடுக்கப்படுவது இல்லை.

இதேவேளை மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா பற்றியும் குறிப்பிட வேண்டும். அவருக்கு நெடுநாள் தலைவலி, தலைசுற்றுதல், அதிகப்படியான மறதி ஏற்படுதல் போன்ற நோய்கள் இருப்பதாக கூறப்பட்டு வைத்திய அறிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆனாலும் அவருடைய பிறந்த நாள் தினத்தன்று குடும்பத்தார் அனைவரும் சிறைச்சாலை சென்று அங்கு பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார்கள். மரண தண்டனை கைதியான அவருக்கான வசதிகளும் சிறைக்குள்ளே செய்து கொடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் அவர் வழக்கு தொடர்ந்து உள்ளார், விடுதலையாகி வெளியில் வந்தாலும் வரலாம் ஆனால் சிறையில் கைதியாக இருக்கும் போது எப்படி இப்படியான சொகுசு வாழ்க்கைக்கு அனுமதி கொடுக்கப்படுகின்றது.

இவை அனைத்திற்குமான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றது அவற்றினை நான் சபைக்கு முன்வைக்கின்றேன்.

இதனைப்பற்றி ஜனாதிபதியுடன் கூறினேன் அவர் பாராளுமன்றத்தில் சத்தமாக தெரிவிக்கச் சொன்னார், பிரதமரிடம் சொன்ன போது துமிந்த சில்வா பற்றி கூறினால் சில ஊடகங்கள் என்னை தாக்குகின்றன செய்வதறியா நிலையில் இருக்கும் நான் என்ன செய்வது என கேட்கின்றார்.

எனவே சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் இது தொடர்பில் கவனம் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன் என ஹிருணிக்கா தெரிவித்தார்.

இதேவேளை இவருடைய உரையைக் குழப்ப பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோஷம் எழுப்பிய போதும் ஹிருணிக்கா தொடர்ந்து உரையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.