இஸ்லாமிய அறிஞர்களிடம், பத்வாகோரும் சிரிய நாட்டு தந்தைமார்
அஸாதின் அரசாங்கப் படையினரால், ஹிஸ்புல்லா அமைப்பினரால் அல்லது ஈரானிய ஆயுததாரிகளால் பிடிக்கப்பட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுவதற்கு முன்னதாக தமது பெண் பிள்ளைகளைக் கொன்று விடுவதற்கு அனுமதி இருக்கிறதா என மார்க்க அறிஞர்களிடம் கிழக்கு அலெப்போவிலுள்ள சில தந்தையர்களால் முன்வைக்கப்பட்ட கவலை தரும் கோரிக்கைகள் தற்போது சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
சிரிய அரச படையினரும், பிரிவினைவாதிகளும் திங்கட்கிழமையன்று அலெப்போவில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளடங்கலாக சுமார் 200 பேருக்கு மரண தண்டனைகளை நிறைவேற்றியுள்ளனர் என நகரத்தில் நேரில்கண்ட சாட்சியங்களை மேற்கோள்காட்டி அல் அரபியா செய்தி அலைவரிசை தகவல் வெளியிட்டுள்ளது.
யுத்தத்தால் சிதைந்து போயுள்ள நகரத்தில் கூட்டுப் படுகொலைகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஈடுபட்டு வருவதாக களத்திலுள்ள செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். அரசாங்க ஆதரவு ஆயுததாரிகள் ஒன்பது சிறுவர்களையும் நான்கு பெண்களையும் எரித்துக் கொன்றதனை நம்பத் தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக அல் அரபியா தெரிவித்துள்ளது.
அலெப்போவிலுள்ள சிறுமியொருவரின் தகவல் எனத் தெரிவிக்கப்படும் செய்தியொன்று சிரிய செயற்பாட்டாளர் ஒருவரினால் முகநூலில் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.
'உலகின் அனைத்து சமயத் தலைவர்களுக்கும் அறிஞர்களுக்கும், இந்தச் சுமைகளை தமது தோள்களில் சுமந்துகொண்டிருப்பதாக கூறப்படுவோருக்கும், நான் இன்னும் சில மணித்தியாலங்களுக்குள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படவுள்ள அலெப்போவைச் சேர்ந்த சிறுமி. சிரியப் படையினர் எனக் கூறப்படும் அரக்கர்களுக்கும் எமக்கும் இடையே ஆண்களோ, ஆயுதங்களோ கிடையாது'
'உங்களிடமிருந்து எனக்கு எதுவும் தேவையில்லை, எனக்காக நீங்கள் பிரார்த்திக்கவும் தேவையில்லை.
என்னால் இப்போது பேச இயலுமாக இருக்கிறது. உங்களது பிரார்த்தனைகளைவிட எனது பிரார்த்தனை மிக வலிமையானது என நம்புகின்றேன். நான் கேட்டுக் கொள்வதெல்லாம் நான் தற்கொலை செய்துகொள்ளும்போது நீங்கள் கடவுளின் ஸ்தானத்தில் இருந்து எனக்கு தீர்ப்புச் சொல்ல வரவேண்டாம் என்பதுதான். நான் தற்கொலை செய்து கொள்ளப்போகின்றேன். என்னை நீங்கள் நரகவாதி எனக் கூறினாலும் அதற்காக நான் கவலைப்படப்போவதில்லை'
'நான் தற்கொலை செய்துகொள்ளப் போகின்றேன் ஏனென்றால் இத்தனை நேரமாக என் தந்தையின் வீட்டில் நான் எந்தத் தேவையுமின்றி உயிர்வாழவில்லை. எனது தந்தை தன்னை நம்பியிருப்போரின் நிலை என்னவாகுமோ என்ற கவலையினாலும், பயத்தினாலும் இறந்துபோனார். நான் இறந்துவிட்டால், சில நாட்களுக்கு முன்னர் அலெப்போ என்ற பெயரை உச்சரிப்பதற்கு கூட தைரியமற்றிருந்தோருக்கு எனது உடல் எவ்வித மகிழ்ச்சியையும் தராது'
'நான் அலெப்போவில் தற்கொலை செய்துகொள்வதற்கு காரணம் என்னவென்றால் இப்போதுதான் இறுதித் தீர்ப்பு நாள், நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த இடத்தை விட நரகம் மோசமானதாக இருக்கும் என நான் நினைக்கவில்லை'
'நான் தற்கொலை செய்துகொள்ளப் போகின்றேன். நான் இறுதியாகச் சென்று சேருமிடம் நரகம்தான் என நீங்கள் அனைவரும் இணைந்து தீர்ப்புச் சொல்வீர்கள் என்பது எனக்குத் தெரியும்.
ஒரு சிறுமி தற்கொலை செய்து கொள்வது என்ற ஒரு விடயம் மாத்திரமே உங்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் என்பதும் எனக்குத் தெரியும். நான் உங்களில் எவருக்கும் தாயுமல்ல, சகோதரியுமல்ல, மனைவியுமல்ல. நான் ஒரு சிறுமி நீங்கள் யாரும் இதுபற்றி கவலைப்படத் தேவையில்லை'
'உங்களது மார்க்கத் தீர்ப்புகள் என்னை ஒன்றும் செய்துவிடாது. அது தொடர்பில் எனக்கு எந்த அக்கறையும் இல்லை எனக் கூறி எனது கருத்தினை நிறைவுசெய்யப்போகின்றேன்.
உங்கள் மார்க்கத் தீர்ப்புகளை உங்கள் குடும்பத்தினருக்காக வைத்துக்கொள்ளுங்கள். நான் தற்கொலை செய்துகொள்ளப் போகின்றேன்.
நீங்கள் இதனை வாசிக்கும்போது நான் தூய்மையானவளாகவும் யாராலும் தீண்டப்படாதவளாகவும் நீங்களெல்லாம் இருந்தும் நான் மரணித்திருக்கிறேன் என அறிந்துகொள்வீர்கள்'
-எம்.ஐ.அப்துல் நஸார்-
Post a Comment