வஸீமின் காரை பின்தொடர்ந்த வாகனம் அடையாளம், விசாரணைகளில் மேலும் முன்னேற்றம்
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு 8, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்ட சி.சி.ரி.வி.காணொளியில் வஸீமின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற கார் ஒன்று தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த மேலதிக விசாரணைகளிலேயே இந்த பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மோட்டார் வாகனத் திணைக்களத்தின் உதவியுடன் பொலிஸார் முன்னெடுத்த குறித்த கார் தொடர்பிலான விசாரணையில் பின் தொடர்ந்த வாகனத்தை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதுடன் தற்சமயம் அது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் வஸீமின் கொலையாளிகள் யார் என்பதைக் கண்டறிய கொலை இடம்பெற்ற தினமான கடந்த 2012 மே மாதம் 17 ஆம் திகதி அதிகாலை முதல் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாடு சென்றோரின் பெயர்ப் பட்டியலையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்ற அனுமதியுடன் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந் நிலையில் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகார வழக்கு கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதன் போது, நீதிமன்றுக்கு சிறப்பு விசாரணை அறிக்கையொன்றினை தாக்கல் செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் மனிதப் படுகொலைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் விமலசிறி ரவீந்ர கடந்த 14 நாட்களுக்குள் இடம்பெற்ற விசாரணைகளின் நிலைமையை தெளிவுபடுத்தினார்.
இதன் போது, கடந்த வாரம் வஸீம் தாஜுதீனின் மூத்த சகோதரரிடமும் சகோதரியிடமும் சிறப்பு வாக்கு மூலங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவு பெற்றதாகவும் இதனை மையப்படுத்திய விசாரணைகள் தொடர்வதாகவும் அவர்மன்றுக்கு அறிவித்தார்.
வஸீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட போது வெளி நாட்டில் இருந்த அவரது சகோதரர் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள இலங்கை வந்த போது, அப்போது நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த சுமித் சம்மிக்க பெரேராவுடன் விசாரணைகளுக்காக சென்றுள்ளார்.
இதன் போது தற்போது தாஜுதீன் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்க பெரேரா, வஸீமின் கொலைக்கு பின்னால் யுவதி ஒருவர் தொடர்பிலான பிரச்சினை உள்ளதாகவும், அதனால் அது தொடர்பில் தேட வேண்டாம் எனவும் கூறியுள்ளார். இந் நிலையில் வஸீமின் சகோதரர் மீள வெளிநாடு சென்றுள்ள நிலையில் அண்மையில் நாட்டுக்கு வந்து சுமித் சம்பிக்க பெரேரா தன்னிடம் கூறிய விடயங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.
எனவே சுமித் சம்பிக்க பெரேராவிடம் இது தொடர்பில் வாக்கு மூலம் பெற வேண்டியுள்ளதாக புலனாய்வுப் பிரிவு மன்றுக்கு அறிவித்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவரிடம் வாக்கு மூலம் பெற அனுமதி வழங்கியது.
இதனைவிட இந்த விவகாரத்தின் மற்றொரு சந்தேக நபரான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவும் புலனாய்வுப் பிரிவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளதாகவும் அதனூடாக தனக்கு விஷேட வாக்கு மூலம் ஒன்றினை வழங்க வேண்டி உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவு மன்றுக்கு அறிவித்தது.
இதற்கு அனுமதியளித்த நீதிவான் அவரிடம் வாக்கு மூலம் பெற உத்தரவிட்டு வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது அன்றைய தினம் வரை இரு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்கவும் நீதிவான் நிஸாந்த பீரிஸ் உத்தரவு பிறப்பித்தார்.
No use justice is already dead in srilanka
ReplyDelete