முஸ்லிம் விவசாயிகளின் கோரிக்கை
(எம்.ஏ.றமீஸ்)
நல்லாட்சி அரசாங்கத்தினைத் தோற்றுவிப்பதில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் முழு மூச்சாய் நின்று செயற்பட்டனர். அம்பாறை மாவட்டத்தில் பல்வோறன பிரச்சினைகள் இருக்கின்ற போதிலும் இந்நல்லாட்சி அரசாங்கம் இதுவரை எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வினைப் பெற்றுத்தரவில்லை என வட்டமடு விவசாய அமைப்புகளின் சம்மேளனத்தின் செயலாளர் எம்.எம்.றாசிக் தெரிவித்தார்.
திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டமடு விவசாய அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று(04) அக்கரைப்பற்று ஏசியாசெப் ரெஸ்டூரண்டில் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
நல்லாட்சி அரசாங்கம் இந்நாட்டில் தோற்றம் பெற்று சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என பெரிதும் எதிர்பார்த்தோம். ஆனால் எமக்கான பிரச்சினைகள் எவையும் இந்நல்லாட்சி அரசாங்கத்தினால் தீர்த்து வைக்கப்படவில்லை. அம்பாறை மாவட்டத்தின் வட்டமடு பிரதேச வயற் காணிகளில் நாம் பூர்வீகம் தொட்டு நெற்செய்கையினை மேற்கொண்டு வந்தோம். ஆனால் தற்போது அக்காணிகளில் எம்மை விவசாயம் செய்யவிடாது இரு தரப்பினர் பல்வேறான தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். இவ்விடயம் பற்றி அனைத்துத் தரப்பினரிடமும் தெரியப்படுத்தியும் இதுவரை எமக்கான எந்தத் தீர்வும் பெற்றுக் கொடுக்கப்படவில்லை.
கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அவர் பக்கம் நின்று அரசியல் செய்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவரினால் தமிழ் முஸ்லிம் தரப்பினர் மத்தியில் இன முறுகலைத் தோற்றுவித்து நல்லாட்சி அரசாங்கத்தினை வேண்டுமென்று குழப்பி காணிகளை அடாவடித்தனத்தில் சுவீகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை அறியாத அப்பாவி மக்கள் வேண்டுமென்றே பலிக்கடாவாக்கப்படுவதையிட்டு மிகுந்த கவலையாக உள்ளது.
கடந்த 2003ஆம் ஆண்டு காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட கால்நடைப் பண்ணையாளர்கள் கடந்த 1970ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் பூர்வீகமாக உள்ள எமது காணிகளுக்கு உரிமைகோர முற்படுவதை அரசியல்வாதிகளும் துறைசார்ந்த அதிகாரிகளும் சட்டத்தினை நிலைநாட்டுபவர்களும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
எமது காணிகளில் விவசாயச் செய்கையினை மேற்கொள்வதற்கென கடந்த முதலாந்திகதி நிலப்பண்படுத்தலில் ஈடுபட்டு வந்த விவசாயி ஒருவரை கால்நடைப் பண்ணையாளர் ஒருவர் பலமாக தாக்கியுள்ளார். இதன் காரணமாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்று வருகின்றார். அந்த விவசாயியைத் தாக்கிய பண்ணையாளர் தான் தப்பித்துக் கொள்வதற்காக திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இவ்விடயத்தினை நாம் முறையாக முறைப்பாடு செய்தமையால் அக்கரைப்பற்று நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக பண்ணையாளர் பொய்யான முறையில் செயற்பட்டார் என்பதுடன் குற்றவாளி குற்றத்தினை ஒப்புக்கொண்டதனையடுத்து அப்பண்ணையாளர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் எட்டாந்திகதி வரை விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
நாம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை(03) விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக சென்றபோது கால்நடைப் பண்ணையாளர் சங்கத்தின் செயலாளர் உள்ளிட்ட சில தரப்பினரும் பெரும்பான்மைச் சமூகத்தினைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரும் தாம் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வருகை தருவதாகவும் இக்காணி மேய்ச்சல் தரைக்குச் சொந்தமானதென்றும் அதனை மீறி விவசாயம் செய்ய முற்பட்டால் நாம் சுட்டு வீழ்த்துவோம் என்றும் மிரட்டினர். இதனையடுத்து இப்பிரதேசத்தில் முறுகல் நிலை ஏற்படுவதற்கான சாத்தியங்கள் தென்பட்டன. இச்சந்தர்ப்பத்தில் வன இலாகா திணைக்கள அதிகாரிகளும் அக்கரைப்பற்று, திருக்கோவில் மற்றும் பொத்துவில் பிரதேச பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து குவிக்கப்பட்டனர்.
இதன்போது கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் நாம் விவசாயம் செய்து வந்தமைக்கும் குடியிருந்தமைக்கும் ஆதாரத்தினை முன்வைத்தோம். எமது ஆதாரம் பலமாக இருந்தபோதிலும் வன இலாகா திணைக்களத்திற்கோ பண்ணையாளர்களுக்கோ போதிய ஆதாரமில்லாமல் பொய் உரைக்கின்றனர் என்பதனைக் கருத்திற் கொண்டு விவசாயிகள் தங்கள் காணிகளில் தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் விவசாயம் செய்ய விடாது தடுப்பவர்களுக்கெதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறும் அறிவித்துவிட்டு பொலிஸார் சென்றனர். இவ்விடயம் சம்பந்தமாக வன இலாகாவுக்கு போதிய படவரைபுகளோ பண்ணையாளர்களுக்கான ஆதாரங்களோ இல்லாமல் உள்ளதனை பொலிஸார் நன்கு விளங்கிக் கொண்டமையினை நாம் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
இதற்கமைவாக எமது விவசாய நடவடிக்ககைகளைத் தொடர விடாமல் தடுத்து நிறுத்த முற்பட்டதுடன் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வருகை தருகின்றோம் என்று பொய்யுரைத்து கடந்த 2008 ஆம் ஆண்டு எமது வார்த்தைகளுக்கு கட்டுப்படாமல் விவசாயம் செய்த நால்வரை சுட்டுக் கொன்றதனைப்போல் உங்களையும் சுட்டுக் கொல்வோம் என மிரட்டிய அத்தரப்பினரையும் நாம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம்.
சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுவதை விரும்பாத சிலர் இவ்விடயத்தினை அரசியலாக்கி மக்களை சூடாக்கி தாம் வாக்குகளை பெறுவதில் அவர்கள் குறியாக உள்ளனர். இதனை அறியாத பொதுமக்கள் வேண்டுமென்றே பலியாக்கப்படுகின்றனர்.
இம்முறை பெரும்போக விவசாயத்திற்கென இப்பிரதேசத்தில் சுமார் 750 இற்கு மேற்பட்ட ஏக்கர் காணிகளில் நாம் விவசாயம் செய்ய வேண்டி இருந்தும் பல்வேறான தடைகளின் காரணமாக இதுவரை அவற்றில் மூன்றில் ஒரு பங்கு காணிகளிலேயே நாம் விவசாயம் செய்துள்ளோம்.
எமது பூர்வீகக் காணியில் வன இலாகா திணைக்களத்தினர் வருகை தந்து எமது திணைக்களத்திற்கான ஒதுக்குக் காணிகள் என்றும் கால்நடைப் பண்ணையாளர்கள் வருகை தந்து இது எமக்கான மேய்ச்சல் தரை என்றும் அடிக்கடி பல்வேறான பிரச்சனைகளை தோற்றுவித்து வருகின்றனர். கடந்த 1970ஆம் ஆண்டு முதல் இக்காணிகளில் நாம் விவசாயம் செய்தும் வசித்தும் வந்துள்ளோம். அதி விஷேட வர்தமானி 339ஃ3 இலக்கம் கொண்ட 1985.04.03ஆம் திகதி வட்டமடுக்காணிகள் அக்கரைப்பற்று கிழக்கு கமநல சேவை மத்திய நிலையத்யத்தின் நிருவாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இதுதவிர 1979.06.20 ஆம் திகதி முதல் சாகாமம் நீர்ப்பாசன திணைக்களத்தின் மூலம் காணிக்கச்சேரி நடத்தப்பட்டு வருடாந்த பேமிட் அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டன. இக்காணி மேய்ச்சற் தரைக்கு சொந்தமானவை என 1981 ஆம் ஆண்டிலிருந்து தொடரப்பட்டு வந்த வழக்கு சுமார் 20 வருடங்கள் நீண்டு சென்று கடந்த 2001.04.23 ஆம் திகதி இக்காணிகள் விவசாயிகளுக்கானது என வெற்றி பெற்றது. இதனையடுத்து கடந்த 2010 ஆண்டு வரை நாம் சுமூகமாக விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த போதிலும் 2010.10.01 ஆந்திகதி வனப் பரிபாலன திணைக்களம் இரவோடு இரவாக இக்காணிகள் வனப்பரிபாலன திணைக்களத்திற்கானது என 1673ஃ45 இலக்கம் கொண்டதாக வர்த்தமானி பிரகடனம் செய்தது. இவற்றினையும் இரத்துச் செய்வதோடு ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தினையும் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
வட்டமடு, வேப்பையடி, கொக்குழுவ, முறாணவெட்டி, வட்டமடு புதிய கண்டம் என்னும் ஐந்து விவசாயக் கண்டங்களுக்குமுரிய சுமார் 1585 ஏக்கர் காணியினை சுமார் 47 வருடங்கள் 717 விவசாயக் குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர் இம்மக்களின் நன்மை கருதியும் நல்லாட்சி அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றார்.
இதன்போது வட்டமடு விவசாய அமைப்புகளின் சம்மேளனப் பொருளாளர் எம்.ஐ.எம்.அதீர், வட்டமடு விவசாய அமைப்புகளின் சம்மேளனப் பிரதிநிதிகளான எம்.எம்.முஹைடீன், எம்.ஏ.சீ.எம்.ஹனீபா உள்ளிட்ட சம்மேளனத்தின் அங்கத்தவர்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
The question is, WILL THE MUSLIMS LOOSE THEIR PRIDE AND ACCEPT REALITY? It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.THIS IS THE ONLY WAY THE MUSLIMS CAN SAFEGUARD THE MUSLIM COMMUNITY AGAINST THE YAHAPALANA GOVERNMENT (or for that matter any government).
ReplyDeleteNoor Nizam.Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener – “The Muslim Voice”.