மாளிகாவத்தை மையவாடி காணி விவகாரம், சுமுகமாக தீர்க்க ஜனாதிபதி முயற்சி - பைஸர் முஸ்தபா
மாளிகாவத்தை மையவாடிக்காணி விவகாரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு வந்து சுமுகமாக தீர்த்து வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
மாளிகாவத்தை மையவாடிக்காணி தனியார் நிறுவனமொன்றினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மையவாடிக் காணி விவகாரம் தொடர்பில் ஏற்கனவே முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய மாநகர ஆணையாளர் வி.கே.ஏ.அநுர ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் மையவாடிக்காணி சட்டவிரோதமாக ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளமை ஒருபோதும் அனுமதிக்க முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.
மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடிக் காணி ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் கொழும்பு மாநகர சபை தாக்கல் செய்திருந்த வழக்கினை மாநகர சபை ஆணையாளர் வாபஸ் பெற்றுக்கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்பு ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்தித்த அமைச்சர் பைசர் முஸ்தபா இந்த உறுதியினை வழங்கினார்.
ARA. Fareel
Post a Comment