அலொப்போ சகோதரிக்கு, இலங்கையிலிருந்து ஒரு மடல்..!
உன் உள்ளத்தின் உறுதியில்தானே எங்கள் நிமிடங்களை வழியனுப்பிக் கொண்டிருக்கிறோம். உன் பிள்ளைக்கு நீ ஊட்டிய வீரப்பால்தானே,
எங்கேயோ இருக்கும் எங்களுக்கு நிம்மதி தந்தது
உன் தந்தையின் பிரார்த்தனைகளெலாம் எங்கள் ஆமீன் கொண்டு நிறைத்தனுப்பினோமே.
கணவன் உன்னை தோள் சாய்த்து இறுதி மூச்சுவரை சுவாசிப்போம் என்றதற்கு, நீகூட முகம்பார்த்து அமைதியாய் புன்னகைத்தாயே
இப்போது,
கயவர் உன் கற்பை நாடுவதால் நீ மரணம் நாடுகிறாயென வலையில் உன் வாக்குமூலம் வருகிறதே
அது மெய்தானா உனக்கென்னவாயிற்று அலெப்போ பெண்ணே!
அது பொய்யாக கூட இருக்கலாம் சத்தியமாய் பொய்யாக இருக்கவே நான் இறைவனிடம் இறைஞ்சுகிறேன்
வரலாற்றை வெற்றி கொண்ட இஸ்லாமிய சாம்ராஜ்யங்களின் வம்சத்தில் வந்த பெண்ணே நீயா மரணம் தேடுவது?
கற்பின் தூய்மைதான் உன் இறைவனிடம் உயர்வுதரும் என்று நீ கருதினால் அந்த தூய்மையை உன் உள்ளத்துக்கு அணிவித்துவிடு
உடைமையைத் திருட வந்தவனுடன் சண்டையிட்டு மரித்தவனுக்கும் ஸஹீத்தின் பெருமையுண்டு என்பதையறியாதவளா நீ
கற்பும் உன் உடைமைதான் அதற்கும் போராடு அல்லது உன் இயலாமையை மறைக்க அங்கிருந்து ஓடியே போ
அல்லது அவன் விரண்டோடும்வரை சப்தமிட்டுக் கத்து
சிற்றெறும்பு கூட உனக்கு துணையாகலாம்
ஆனால் கற்போடுதான் இறைவனை சந்திப்பேன் என நீ மரணத்தை அழைத்து, இறைவனையே சந்தேகித்து விட்டாயே
அந்த அர்ரஹ்மானை எவ்வாறு இல்லாத பண்புகொண்டு எங்களுக்கு காட்ட முனைந்தாய் அலெப்போ பெண்ணே!
எங்கள் பிரார்த்தனை உனக்கு தேவையில்லை என்கிறாயே, அதுதான் நம் மோட்சத்துக்கான திறவுகோல் என்பதை எப்படி மறந்தாய் நீ
இந்த நரகத்தைவிட அந்த நரகம் மேல் என்று நீ கூறியது கேட்டு அந்த மரணமே விக்கித்து வெட்கித்துப் போயிற்று
உன் தீர்மானங்களில் உனக்கிருக்கும் சுதந்திரம் உன்னையும் என்னையும் இணைக்கும் மார்க்கத்தின் வேர்களை அசைக்காதிருக்கட்டும்
நீங்களெல்லாம் இருந்தும் நான் மரணித்திருக்கிறேன் என்று நொந்து போன வசனங்கள்கூறி கலங்கடிக்காதே
பாவங்கள் மன்னிக்கப்பட்டவளாய் நீ மரணத்தின் வாயிலை புன்னகையோடு நோக்கும் காட்சி என்னை பொறாமைத் தீ சூழ்ந்து சாம்பலாக்கிக் கொண்டிருக்கிறது
அந்தச் சாம்பல் நம்மை சுவனத்தில் இணைக்கும் என்ற பேராசையில் நான் உனக்கான பிரார்த்தனைகளுடன்…!
Post a Comment