Header Ads



மைத்திரி - ரணில் கூட்டணியால், நரேந்திர மோடி குழப்பம்

மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம் சீனாவுடன் கூட்டாக இணைந்து செயற்படுவது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நிச்சயம் குழப்பத்துக்கு உள்ளாக்கியிருக்கும் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“சிறிலங்காவின் முன்னைய அரசாங்கம் சீனாவுடன் உறவு வைத்திருந்ததை இந்தியா கடுமையாக எதிர்த்தது. அதனால் தான், 2015 அதிபர் தேர்தலின் போது, எதிர்க்கட்சிகளைப் பலப்படுத்தியது.

முன்னைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட சீனாவின்  திட்டங்களை இந்தியா விரும்பவில்லை.

கடந்த அதிபர் தேர்தலில் ஐதேக தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு அளித்தமைக்காக இந்தியா வருந்த வேண்டும்.

போர் நடந்த காலத்திலும், போருக்குப் பிந்திய காலத்திலும், சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு இருந்தது என்பதை, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் அண்மையில் வெளியிட்டுள்ள நூலில் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

ஆனால், மேனனை அடுத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்ற அஜித் டோவல் முற்றிலும் வித்தியாசமான நிலைப்பாட்டை எடுத்தார்.

சிறிலங்காவின் உறவுகள் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடுகள் குறித்து இரண்டு முறை விளக்கமளிக்கப்பட்டது.

சீனாவின் 1.4 பில்லியன் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்துமாறு இந்தியா கோரியது. இந்தியாவின் அந்த கோரிக்கை நியாயமற்றது.

சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் துறைமுக அதிகார சபை இணைந்து கூட்டு முயற்சியாக அமைக்கப்பட்ட கொழும்பு அனைத்துலக கொள்கலன் முனையத்தை, சிறிலங்கா பொறுப்பேற்க வேண்டும் என்றும் இந்தியா கோரியது.

இந்த முனையத்தில் 85 வீத உரிமையை சீன நிறுவனம் கொண்டிருந்தது. எஞ்சிய 15 வீதமே துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமானது.

சீனாவின் நிதியில் மேற்கொள்ளப்படும் எல்லா உட்கட்டமைப்புத் திட்டங்களையும், நிறுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்று அஜெித் டோவல் என்னிடம் கூறினார். அம்பாந்தோட்டை துறைமுகம் சிறிலங்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

சிறிலங்கா ஒரு சிறிய நாடு, உங்களுக்கு இதுபோன்ற அபிவிருத்தித் திட்டங்கள் தேவையில்லை என்றும் அஜித் டோவல் குறிப்பிட்டார்.

ஆட்சி மாற்றத்தின் மூலம் இந்தியாவினால் தனது நோக்கத்தை அடைய முடியவில்லை.

2015 ஜனவரியில் ஆட்சியைக் கைப்பற்றியவுடன், சீனாவைப் பகைத்துக் கொண்ட தற்போதைய அரசாங்கம், இப்போது சீனாவைத் திருப்திப்படுத்த முனைகிறது.

துறைமுக நகரத் திட்டம் தற்போது மேற்கொள்ளப்படுகிறது. அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக அண்மையில் ஏற்படுத்தப்பட்டுள்ள உடன்பாடு, இருதரப்புக்கும் இடையில் பலமான உறவு இருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

1 comment:

  1. He is confusing...

    Is he supporting CHINA ? or INDIA ? he seems contradicting with these two countries as evidenced from his speech.

    It is unclear whether he support or warn both china and india ?

    ReplyDelete

Powered by Blogger.