Header Ads



முன்னாள் பிரதமரின் புகைப்படம் கசிந்தது, குடும்பத்தினர் வேதனை

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் புகைப்படத்தை ஊடகங்கள் வெளியிட்டதன் மூலம் அவருக்கு நெருக்கமானவர்களும் குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர் என நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஹொரணை அலுவலகத்தில் இன்று(24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், முன்னாள் பிரதமரை பார்ப்பதற்காக பலர் வைத்தியசாலைக்குச் சென்ற நிலையில் முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்ன வைத்தியசாலையில் முன்னாள் பிரதமர் விக்ரமநாயக்கவை பார்த்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஊடகங்களில் வெளியாகியது.

இதனால், முன்னாள் பிரதமர் மீது அன்பு கொண்ட பலர் தமது குடும்பத்தினரை தொடர்புக் கொண்டு தகவல்களை கேட்டறிய ஆரம்பித்ததால் நானும் அவரது குடும்பத்தினரும் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளானோம்.

இது தாம் உட்பட குடும்பத்தினருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும் செயல். குணமடைந்து இன்னும் சில தினங்களில் வைத்தியசாலையில் இருந்து வெளியேற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையிலும் நோயாளியாக இருக்கும் அவரை அனுமதியின்றி புகைப்படம் எடுத்து அதனை ஊடகங்களுக்கு வழங்கியது ஒழுங்கீனமானது எனத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.