அரபுலக அடிமைகள், ஊமைகளாய் மௌனித்திருக்க..!
ஐ.நா சபை ஆசீர்வதிக்க
அரபுலக அடிமைகள்
ஊமைகளாய் மௌனித்திருக்க
வெள்ளை மாளிகையின்
கறுப்பு உள்ளங்கள்
செங்கம்பளம் விரிக்க
அலெப்போவில் அரங்கேறும் அராஜகம்
அனைத்துலக பயங்கரவாதம் ..
வரலாறு காணாத
வன்முறை கண்டும்
மனித உரிமை பற்றி
மார் தட்டி ஓலமிடும்
மேற்குலக நாடுகள்
வாயசைக்க மறுக்கின்றன
அலெப்போவின் நெருப்பை
அணைத்திடத் தயங்கும்
மனித உரிமை ஆர்வலரே!
ஐக்கியம் பேசும் ஐநா சபையே!
பயங்கரவாதம் பேசிய
உங்கள் முகங்கள் எங்கே?
இனவெறி தெறிக்கும்
கொடூர விழிகளுடன்
இஸ்லாமிய இரத்தம்
வழிந்தோடும் பற்களுடன்
உங்கள் நிஜமான முகங்கள்
இப்போதன்றோ நிதர்சனமாகின்றன
அனைத்துலகப் பயங்கரவாதியே!
உனையளிக்க இறைவனுக்கு
ஏற்பாடு தேவையில்லை
சிலந்தி வலையால்
செம்மல் நபியைக் காத்தவன்
சிறுகற்களால் யானைப்படையை
வைக்கோலாய் சிதைத்தவன்
நொண்டிக் கொசுவால்
நம்றூதை அழித்தவன்
உனையளிக்க இறைவனுக்கு
ஏற்பாடு தேவையில்லை
எங்கள் ஈமானிய இதயங்களும்
ஏந்துகின்ற கரங்களும்
இறைவனை எட்டும் வேளை
நீ அழிவாய் அந்நாளில்..
விழிகளில் நீருடன்
இருகரமேந்துவோம்
இறைபிரார்தனை எனும்
ஆயுதமேந்துவோம்!
-யாழ் அஸீம்-
Post a Comment