Header Ads



''பிச்சை எடுத்தாவது, அமைச்சை நடத்துவேன்” - மனோ

“தன்னுடைய அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதல்ல. இந்த விவகாரம் தொடர்பில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சரின் கவனத்துக் கொண்டுவந்துள்ளேன். இறுதி வாக்கெடுப்புக்கு முன்னர், திருத்தங்களை மேற்கொள்வதாக உறுதியளித்தனர். அவ்வாறு கிடைக்காவிடின், பிச்சை எடுத்தாவது இந்த அமைச்சை நடத்துவேன்” என்று, தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.  

நாடாளுமன்றத்தில், நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற, தேசிய கலந்துரையாடல்கள், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சுகள்  மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,   

“தேசிய பிரச்சினைக்கு ஆயுத ரீதியாகத் தீர்வுகாண முற்பட்ட காலம் நிறைவடைந்துள்ளது. அதிகாரப் பகிர்வின் மூலமே, தேசிய பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காண முடியும். பல்லினங்கள் வாழும் நாடொன்றில், மூன்று தசாப்த மோதல்களுக்கு பின்னர், இனங்களுக்கிடையிலான மோதல்களை வைத்து அரசியல் செய்த நாட்டில், அந்த இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் பாரிய பொறுப்பு என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.   

இந்த நாட்டின் வரலாற்றை எடுத்துக்கொண்டால் விஜயன், குவேனியின் திருமண சம்பந்தத்தோடு ஆரம்பமாகின்றதை திரிவுபடுத்திக் கூறப்படுகிறது. வரலாற்றில் தமிழ் மக்களின் பங்களிப்புக்கள் இருட்டடிப்புச் செய்யப்படுள்ளன. இவை அனைத்தும் தவறானான முன்னுதாரணங்களாகின்றன.  

கண்டியின் முதலாவது எழுத்தான ‘க’ என்பதற்கு பதிலாக ‘கு’ என்ற எழுத்தும் எழுதப்பட்டுள்ளது. அப்படி எழுதப்பட்டால் தூஷணம்தான் மிஞ்சும். அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்.   

தேசிய பிரச்சினைக்கான தீர்வில் 51 சதவீதம் மொழிப்பிரச்சினையே உள்ளது. எனது தலைமையிலான அமைச்சின் மூலம் இந்த 51 சதவீதமான மொழிப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.   

தேசிய கீதத்தை தமிழ்மொழியில் பாடுவதற்கான உரிமை 1960களில் எமக்கு கிடைத்திருந்தாலும், கடந்த ஆண்டே அது நடைமுறைக்கு வந்திருக்கின்றது. தேசிய கீதம் தமிழில் பாடுவது தொடர்பாக, பாரிய பீதி ஏற்படுத்தப்படுகின்றது.
உண்மையிலேயே பேய் அவ்வளவு கறுப்பில்லை என்பது போன்று, தமிழ் மொழியில் தேசியக் கீதத்தைப் பாடுவது தவறில்லை. அது பெரிய பிரச்சினையும் இல்லை.  தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடும்போது ‘இலங்கை மாதா’ என்கின்றனர். தமிழில் ‘இலங்கை தாயே’ என்கின்றனர். இதில் என்ன தவறிருக்கின்றது? ‘ஈழம் தாயே’ என்று பாடவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.‘இலங்கை தாயே’ என்று, தமிழில் பாடும்பொழுதுதான், உண்மையிலேயே நாமும் இலங்கையர்கள் என்ற உணர்வு ஏற்படும்” என்றார்.   

No comments

Powered by Blogger.